”தமிழ்நாடு தானே சரி; விஜய், அஜித் ரசிகர்கள் இரண்டையும் பார்ப்பாங்க” - எச்.வினோத் நேர்காணல்

”தமிழ்நாடு தானே சரி; விஜய், அஜித் ரசிகர்கள் இரண்டையும் பார்ப்பாங்க” - எச்.வினோத் நேர்காணல்
”தமிழ்நாடு தானே சரி; விஜய், அஜித் ரசிகர்கள் இரண்டையும் பார்ப்பாங்க” - எச்.வினோத் நேர்காணல்

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள துணிவு திரைப்படம் ஜனவரி 11 நள்ளிரவு 1 மணிக்கு வெளியாகிறது. புதிய தலைமுறைக்கு இயக்குநர் எச்.வினோத் அளித்த நேர்காணலின் முழுவிபரம்:-

துணிவு பட இயக்குனர் திரு H.வினோத் அவர்களுடன் ஒரு நேர்காணல்.

எங்கு காணிலும் சூரியன் என்பது போல் எங்கு பார்த்தாலும் துணிவு வினோத் பற்றிய செய்தியாக இருக்கிறதே? படம் வெளியாக போகிற இத்தருணத்தில் உங்களுக்கு பதற்றமாக உள்ளதா??

கண்டிப்பாக. அனைவருக்குமே பதற்றம் இருக்கும். இந்த பதற்றத்தை கட்டுப்படுத்த தெரிந்த மனிதர்களாக இருந்தல் மட்டுமே இது சாத்தியம். அப்படிப்பட்டவர்கள் ஒருசிலரே.

பெரிய ஸ்டார்களை வைத்து படம் பண்ணும்பொழுது அவர்களுக்கென்று ஒரு தனி பாணி இருக்கும். ரசிகர்கள் அதை எதிர்பார்பார்கள். அதனால் உங்கள் கதையை அவர்கள் பாணிக்கு மாற்றிக்கொள்வீர்களா?

பெரிய ஸ்டார்களை வைத்து தான் படம் எடுக்கலாம் என்று எண்ணும்போது அவர்களின் பாணியில் தான் கதை உருவாக்கப்படுகிறது. அப்பொழுது தான் வியாபார ரீதியில் படம் ஓடும். ஒவ்வொரு ரசிகரும் ஒவ்வொரு விஷயத்திற்காகதான் படம் காண வருவார்கள் அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யவேண்டும்.

ட்ரெய்லரை பார்க்கும் பொழுது அதில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் காண முடிந்தது. சண்டை காட்சிகளை எடுப்பதில் ஏதாவது சவால்கள் இருந்ததா?

துணிவு படத்தில் இரு வகையான சண்டை காட்சிகளை பார்க்க முடியும். ஒன்று துப்பாக்கி சண்டை இன்னொன்று கடலில் மோதும் சண்டை. இதில் துப்பாக்கியால் ஏற்படும் சண்டையின் போது அதன் சத்தம் அனைவர் காதிலும் பிரச்சனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அதற்கான முனேற்பாடுகளை செய்துக்கொண்டோம்.
அதேப்போல் கடலில் எடுக்கப்பட்ட சண்டையின் போது, ரொம்ப கஷ்டப்பட்டோம். ஒரு நாளைக்கு 7 அல்லது 8 ஷாட் தான் எடுக்கமுடிந்தது.

உங்களின் முந்தய படம் சதுரங்க வேட்டை பணத்தை பற்றி பேசிய கதை. அதேபோல் இந்தப்படமும் பணத்தை பற்றி பேசிய படமா?

இல்லை. இது வேற அது வேற. ஒரு இயக்குனர் ஒரு திரைப்படம் எடுத்து அது நன்றாக ஒடினால், அந்த ஜானரில திரைப்படமாக இருக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் தான் மக்கள் இருப்பார்கள்.

ஆனால், உங்கள் திரைப்படத்தில் சதுரங்கவேட்டை, தீரன், வலிமைக்குமே எந்த தொடர்பும் இருக்கக்கூடாது னு நினைக்கிறேன்னு சொல்லி இருக்கீங்க. ஆனால் ஒரு செட்டாப் ஜானர்ல படம் பண்ணினால் முத்திரை பதிக்கலாமே?

இவர் படம் இப்படிதான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டால், வியாபாரம் ஆகும், ஆனால் அதுவே சலித்துவிடும்.

ரசிகர்களை பற்றி பேசும் அஜித், ரசிகர்கள் தன்னை அரசியலில் தொடர்புபடுத்தி பேசுவது பற்றி பேசி இருக்காறா?

ரசிகர்கள் பற்றி பேசும்பொழுது, அவர்கள் அதிக நேரம் சினிமாவில் செலவு செய்வதை அவர் விரும்புவது கிடையாது.

வாரிசு படமும் ஒரே நாளில் வெளியாகிறது என்ற செய்தியை கேட்ட போது அஜித்தின் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது?

எங்களின் சூட்டிங் முடிந்து டப்பிங் முடிந்து தான் அச்செய்தி வெளியானது. எங்கள் ப்ளான் படி எதுவுமே செய்யமுடியாத படியினால் தான் பொங்கலுக்கு வைத்தோம்.

நீங்கள் வாரிசு ட்ரெய்லர் பார்த்தீர்களா?

ம்... பார்த்தேன் நல்லா இருந்தது.

அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மோதிக்கொள்வார்கள் என நினைக்கிறீர்களா?

அப்படி ஒன்றும் இருக்காது, இவர் படத்தை அவர்களும் அவர் படத்தை இவர்களும் பார்த்துக்கொண்டு ஒருவருக்கொருவர் புத்துணர்சியாக பேசிக்கொள்வார்களே தவிர, பெரிய வாக்குவாதம் வரும்பொழுதுதான் பிரச்சனை பெரிதாகும். அப்படி ஒரு விவகாரமும் வராது என நினைக்கிறேன்.

கனெட், டிரைவர் ஜமுனா மாதிரியான பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் நிறைய வந்துக்கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பெண்கள் எல்லாத்துறைகளிலும் இக்காலத்தில் வருவதைப்போல திரைத்துறையிலும் வந்துக்கொண்டிருக்கிறது. அவ்வளவு தான்.

உங்களுக்கு சென்னை பிடிக்குமா? அல்லது பிறந்து வளர்ந்த ஊர் சின்னபள்ளிக்குப்பம் பிடிக்குமா?

சென்னை தான். ஏனென்றால், நான் என் சிறுவயதிலேயே சென்னை வந்துவிட்டதால், இது தான் என் மனதுக்கு பிடித்தமான இடம்.

சைவமா? அசைவமா?

சைவம்

ஆன்மீகவாதியா?கடவுள் மறுப்பாளரா?

இரண்டும் இல்லை.

தமிழ் நாடா? தமிழகமா?

தமிழ் நாடு தானே சரி?

அரசியல்வாதி உதயநிதியா? அல்லது, தயாரிப்பாளர் உதயநிதியா?

எனக்கு இரண்டுமே வேண்டும்.

வாரிசா? துணிவா?

துணிவில் எனது வொர்க் இருப்பதால், துணிவு தான் என் சாய்ஸ்

அஜித் சாரின் வேற முகம் ஏதாவது இருக்கிறதா?

அவர் அவரின் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது எனக்கு பிடிக்கும்.

அஜித் சாரிட நீங்கள் கற்றுக்கொண்ட விஷயம்? 

அவர் சக மனிதர்களை மதிக்கும் விஷயம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் அவரிடமிருந்து கற்றுக்கொள்கிறேன்.

துணிவு படம் எந்த விஷயத்தை ஆழமாக பதிவு பண்ணும்?

No guts No glory இந்த விஷயத்தை நான் கையில் எடுத்துள்ளேன். அது மக்கள் மனதில் ஆழமாக பதியும்.

சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை பீஸ்ட் படத்துடன் ஒப்பிட்டு பேசினார்கள். இது குறித்து உங்களின் பதில்?

இதுவும் ஒருவித பட ப்ரமோஷன் தான்.

கொரானா காலத்தில் OTT யின் வளர்சி அதிகமாக மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் தயாரிப்பாளர்களின் நிலை என்ன?

தடாலடியான மாற்றத்தை உடனடியாக கொண்டுவர இயலாது.

தனுஷ் வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக கேள்விபட்டோம் அதை பற்றி...?

அது குறித்து தயாரிப்பாளரும், அவரும் தான் முடிவெடுப்பார்கள்.

விஜய் வைத்து படம் எடுப்பீர்களா?

அதை அவர் தான் முடிவு பண்ணணும்

நீங்கள் கதை எழுத தனியாக இடம் தேடிப்போவீர்கள?

அப்படி ஏதும் இல்லை. எங்கு இருப்பேனோ அங்கேயே கதை உருவாகிவிடும்

அஜித் உங்கள் கதைக்கு ஏதாவது மாற்றத்தை கொண்டுவந்தாரா?

அவர் அதற்குள் வரமாட்டார்.

கடைசியாக, ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஓபன் மைண்டுடன் வாங்க... ஜாலியா படம் பார்த்துட்டு போங்க.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com