உக்ரைன் நாட்டுக்கு டூயட் ஆடப்போகும் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் ஜோடி
நடிகர் விக்ரமும் கீர்த்தி சுரேஷும் உக்ரைன் நாட்டுக்கு பாடல் படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளனர்.
இயக்குநர் ஹரி இயக்கி வரும் திரைப்படம் ‘சாமி ஸ்கொயர்’. இந்தப் படம் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு ஏறகுறைய முடிவடையும் நிலையை எட்டியுள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதி பாடல் படப்பிடிப்பு ஒன்றிற்காக விக்ரமும் கீர்த்தி சுரேஷும் உக்ரைன் நாட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில்தான் இப்படத்தின் அறிமுக பாடலான ‘மொலகாபொடியே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதனை அடுத்து படக்குழு உக்ரைன் பயணிக்க திட்டமிட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.
‘சாமி’ முதல் பாகத்தில் விக்ரமின் ‘ஆறுசாமி’ கேரக்டர் அதிகம் பேசப்பட்டது. அதே போல த்ரிஷாவின் பாத்திரமும் அதிகம் கவனிக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் பாகமான ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் த்ரிஷா பல்வேறு காரணங்களால் நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு பதிலாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.