’கழுத்தில் முகத்தை புதைத்து...’, ’குயின்’ இயக்குனர் மீது கங்கனா பரபரப்பு பாலியல் புகார்
இந்தி சினிமாவுக்கு இது பாலியல் தொல்லை காலம் போலிருக்கிறது. தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது கூறியிருக்கிற புகார் பாலிவுட்டில் புயல் கிளப்பியுள்ள நிலையில், அடுத்த அதிரடியை வீசி இருக்கிறார் கங்கனா ரனவத்!
தமிழில், ஜெயம் ரவியுடன் ’தாம் தூம்’ படத்தில் நடித்தவர் இவர். இந்தியில் முன்னணி நடிகையான கங்கனா, இப்போது ஜான்சிராணியின் வாழ்க் கைக் கதையான ’மணிகர்னிகா’ வில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அவர் தேசிய விருது பெற்ற ’குயின்’ பட இயக்குனர் விகாஸ் பாஹ்ல் மீது பரபரப்பு புகார் ஒன்றைக் கூறியுள்ளார்.
இந்தி திரைப்பட நிறுவனமான பாண்டோம் பிலிம்ஸில் இயக்குனர் அனுராக் காஷ்யப், விக்ரமாதித்யா, மது மண்டேனா ஆகியோருடன் ஒரு பார்டனராக இருக்கிறார் இயக்குனர் விகாஸ் பாஹ்ல். இவர், அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பரபரப்பு எழுந்தது. 2015 ஆம் ஆண்டு அந்தப் பெண் வெளிப்படையாக புகார் கூறியும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. தான் வேலையை விட்டு விலகும் வரை அவரது பாலியல் தொல்லை தொடர்ந்தது என்று அந்தப் பெண் கூறியிருந்தார்.
(விகாஸூடன் கங்கனா)
இதுபற்றி கங்கனா ரனவத்திடம் கேட்டபோது, ‘அந்தப் பெண் கூறியதில் உண்மை இருக்கும். அவரை நம்புகிறேன். ஏனென்றால் ’குயின்’ பட ஷூட்டிங்கின் போது பலமுறை விகாஸிடம் அசவுகரியமாக நான் உணர்ந்திருக்கிறேன். விகாஸ் பாஹ்ல் ஒவ்வொருமுறை என்னைச் சந்திக் கும்போதும் இறுக்கிக் கட்டிப்பிடிப்பார். பிறகு என் கழுத்தில் முகத்தைப் புதைத்து என் தலைமுடியின் வாசனையை நுகர்வார். பிறகு உங்கள் வாசனையை நான் விரும்புகிறேன் என்பார். அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது என்பதை சொல்வேன். அந்தப் பெண் சொன்ன புகாரை அப்போது அப்படியே கொன்றுவிட்டார்கள். ஆனால் நான் அப்போதே அந்த பெண்ணுக்கு ஆதரவாக இருந்தேன்’ என்று கூறியுள்ளார்.
கங்கனாவின் இந்த புகார் இந்தி சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.