இதுவரை தளபதி.... இனிமேல் தலைவன்... விஜய் உருவாக்கியிருக்கும் ராஜபாட்டை
செய்தியாளர் புனிதா பாலாஜி
எத்தனை ஹிட் படங்களை கொடுத்தாலும், அத்தனை எளிதாக மக்கள் இதயங்களில் இடம் பிடித்துவிட முடியாது... ஆனால், மனதைக் கவரும் அந்த மாய வித்தையை அறிந்தவர் நடிகர் விஜய்... தன் ரசிகர்களின் மனதில் கோட்டை கட்டி, அன்பின் ஆட்சியை செய்து கொண்டிருக்கும் விஜய்க்கு இன்று 51-வது பிறந்தநாள்..!
இதுவரை தளபதி.... இனிமேல் தலைவன்... இதுதான் விஜய் தனக்காக உருவாக்கியிருக்கும் ராஜபாட்டை... குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இந்த திரை நட்சத்திரம், சினிமாவின் விடிவெள்ளியாக மங்காமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.. நாளைய தீர்ப்பு படத்தில் தன் திரைப்பயணத்தை தொடங்கிய விஜய், தன் ரசிகர்களின் குடும்பங்களுக்கு வாரிசாகியிருக்கிறார்.. 30 வருட திரை அனுபவத்தில் முன்னும் பின்னுமாய் பல நெருக்கடிகளைக் கடந்து, சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி, நாயகனாக உயர்ந்து நிற்கிறார், விஜய்..
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் என்ற திரைப்பின்புலம் இருந்தாலும் வெற்றிகள் அனைத்தும் அவருக்கு அத்தனை எளிதாக கிடைத்துவிடவில்லை..
தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்ட விஜய், தன்னைத் தானே நுட்பமாக செதுக்கிக் கொண்டார்... நடிப்பு வரவில்லை என விமர்சிக்கப்பட்டதால், கைதேர்ந்த நடிப்பை கொடுக்க கற்றுக் கொண்டார்... ஆட்டம் வரவில்லை என்று அலட்சியம் செய்யப்பட்டதால், நடனம் பயின்று நல்ல பாடல்களைக் கொடுத்தார்..அந்த போர்க்குணம்தான் இன்றும் அவருக்கு கைகொடுத்துக் கொண்டிருக்கிறது..
விஜய் ஒரு பன்முகத் திறன் கொண்ட கலைஞன்... ஒரு மாஸ் ஹீரோவுக்கான அத்தனை அம்சங்களையும் ஒரு சேர கொண்டிருப்பதால் தான், சுட்டிக் குழந்தைகள் முதல் பாட்டி வரை, தலைமுறைகள் கடந்த ரசிகர் கூட்டத்தைக் கொண்டிருக்கிறார்...
கடந்த காலத்தில் சந்தித்த வெற்றி தோல்விகளில் இருந்து அனுபவத்தை கூர்தீட்டிக் கொண்ட விஜய், இப்போது கட்சி தொடங்கி அரசியல் நோக்கி நகர்ந்திருக்கிறார்.. சினிமாவில் நாளைய தீர்ப்பு மூலம் தொடக்கம் பெற்ற விஜய், சாமானியர்களின் தீர்ப்புக்கான நாளை நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்தியிருக்கிறார்...