RIP Vijayakanth | ‘இடுக்கண் களைவதாம் நட்பு’..காலத்தை வென்ற விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தரின் நட்பு!

கருப்பு எம்ஜியாராக அவர் மக்கள் மனதில் இடம்பிடிக்க முக்கிய காரணம் அவரின் தோழன் இப்ராஹிம் ராவுத்தர்
இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்த்
இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்த்PT

சங்க இலக்கியங்களிலும், உலகப் பொதுமறையான திருக்குறளிலும், புராணங்களான ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்களிலும் நட்பின் இலக்கணங்களை போற்றும் பல கதைகள் இருக்கிறது.. கர்ணன் - துரியோதனன், பிசிராந்தையார் - கோப்பெருஞ்சோழன், ஔவையார் - அதியமான்.. இந்த பெயர்களெல்லாம் நட்பின் இலக்கணத்தை காலத்தை கடந்து தாங்கி நிற்பனை. அந்த வரிசையில் கருப்பு எம்ஜியாராக மக்கள் மனதில் இடம்பிடித்த கேப்டன் விஜயகாந்த் மற்றும் ”இப்ராஹிம் ராவுத்தர்” இடையிலான நட்பும் நிச்சயம் இடம்பெறும்.

ஆரம்ப வாழ்க்கை

சிறுவயது நண்பர்களான இப்ராஹிம் ராவுத்தரும், விஜயகாந்த்தும் சினிமாவில் நடிக்க விரும்பி ஒன்றாக மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்தவர்கள். இதில் நண்பன் விஜயகாந்த்தை சினிமாவில் ஹீரோவாக நடிக்கவைத்து பெரிய ஆளாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்துள்ளார் ராவுத்தர்.

சென்னை வந்ததிலிருந்து இருவரும் அனைத்து சினிமா கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கி உள்ளனர். இதில் விஜயகாந்திற்கு ஒரு சிலபடங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அப்படம் சரிவர ஓடாததால், அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து படவாய்ப்புகள் இல்லாமல் கஷ்டப்பட்ட சமயத்தில், ஏவிஎம் மூவிஸ் முரட்டுக்காளை என்ற படத்தை தயாரித்தனர். அதில் ஹீரோவாக ரஜினியும் வில்லனாக விஜயகாந்த்தையும் புக்செய்து விஜயகாந்த்திற்கு சம்பளமாக ஒரு லட்சம் பணம் பேசப்பட்டு, முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. அச்சமயத்தில் இப்ராஹிம் ராவுத்தர் வெளியூரில் இருந்திருக்கிறார்.

ஏவிஎம்மில் விஜயகாந்த் வில்லனாக நடிக்க இருக்கும் செய்தி தெரிந்ததும் உடனடியாக சென்னை வந்தவர், விஜயகாந்த்திடம் “நீ முன்பே ஹீரோவாகதான் நடித்தாய். ஆகவே இனி நீ நடித்தால் ஹீரோவாகதான் நடிக்கவேண்டும். வில்லனாகவோ, துணை கதாபாத்திரத்திலோ நடிக்க கூடாது. ஆகையால் இந்த பணத்தை திருப்பி ஏவிஎம் நிறுவனத்திடமே கொடுத்துவிடு “ என்று கூறி இருக்கிறார். நண்பன் சொல்லை தட்டாத விஜயகாந்த் ஏவிஎம்மிடம் பணத்தை திருப்பி தந்ததாக சொல்லப்படுகிறது.

விஜயகாந்த்
விஜயகாந்த்கோப்புப்படம்

அதேபோல் அவர் எந்த படத்தில் நடிக்கவேண்டும், எந்த உடை போடவேண்டும், எந்த காரில் போகவேண்டும் என்பது வரை அனைத்து முடிவையும் அனுசரணையோடும் அக்கறையோடும் இப்ராஹிம் ராவுத்தர்தான் எடுப்பாராம். இப்படி நண்பன் திரைத்துறையில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பதற்கு பக்கபலமாக இருந்துள்ளார் ராவுத்தர். விஜயகாந்த்திடம் ஒரு வேலை ஆகவேண்டும் என்றால் ராவுத்தரிடம் சொன்னால் போதும். இப்படி நண்பர்கள் இருவரும் நகமும் சதையும் போல இருந்துவந்துள்ளனர். விஜயகாந்த் நடிக்கும் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என்று திருப்பதிக்கு சென்று மொட்டை போடும் அளவுக்கு இப்ராஹிம் ராவுத்தர் இவருடன் நட்பாக இருந்துள்ளார்.

விஜயராஜ், விஜயகாந்தாக மாறியது எப்படி?

விஜயகாந்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சமயம், எம்.ஏ.காஜா இயக்கத்தில் இனிக்கும் இளமை என்ற திரைப்படம் இவருக்கு சினிமா துறையில் கோலோச்ச அடித்தளமிட்டது. விஜயராஜாவாக இருந்த இவரின் பெயரை விஜயகாந்த் என்று இப்படத்தில் தயாரிப்பாளர் மாற்றினார்.

பின்னாளில், திரைத்துறையின் தனக்கென்று ஒரு பாணியை தனக்கென்று ஒரு பக்கத்தை ஆக்கிரமித்த விஜயகாந்த் மக்களுக்கு நிறைய உதவிகளை செய்து மக்களின் அன்பை பெற்றார். மக்கள் இவரை கருப்பு எம்.ஜி.ஆர் என்று அழைக்கும் அளவிற்கு இருக்கும் மக்களுக்குமான உறவு வலுவானது.

உடையின் ரகசியம்

இவர் சிறுவயதில் தேவகோட்டையில் இருக்கும் டீபிரிட்டோ பள்ளியில் படித்த சமயம் இவரின் தமிழ்வாத்தியார் வெள்ளை வேட்டியில் கதர் சட்டையில்தான் வருவாராம். அதில் ஈர்க்கப்பட்ட விஜயகாந்த் எங்கு சென்றாலும் வெள்ளைவேட்டியில்தான் செல்வார் என்றும் சொல்லப்படுகிறது.

திரைப்பட கல்லூரி மாணவர்களிடம் கொண்ட அன்பு

தனக்கென்று திரைப்படத்தில் ஒரு நிலைக்கு வந்தபிறகு திரைப்படகல்லூரியில் படித்துவரும் மாணவர்களை ஊக்குவிக்க அவர்கள் எடுக்கும் படத்திற்கு முன்னுரிமை தந்து அதில் நடிக்க ஆரம்பித்தார். இப்படி இவர்மூலமாக 50 மேற்பட்ட புதிய டைரக்டர்கள் உருவாகி உள்ளனர். திரைப்படகல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் தைரியமாக இவரை அணுக்கி இவரிடம் கால்ஷீட் பெறலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர். அதில் ஒருவர்தான் ஆர்.கே செல்வமணி. ஆம், செல்வமணி விஜயகாந்தை வைத்து இயக்கிய புலன்விசாரணை என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இப்படி அனைவராலும் போற்றப்பட்டவர் நண்பன் ராவுத்தரை இழந்ததும், குழந்தைப்போல அழுததை யாராலும் மறக்கமுடியாது.

ரவுத்தருக்காக கண்ணீருடன் கடிதம் எழுதிய விஜயகாந்த்!

நட்பின் இலக்கணமாய் திகழ்ந்த விஜயகாந்த் - ராவுத்தர் காலத்தின் கட்டாயத்தால் இறுதி காலத்தில் பிரிந்து இருக்க நேரிட்டது. ராவுத்தர் தனியார் மருத்துவமனையில் இருந்த தருணத்தில் விஜயகாந்த் அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார். ஆனால், ராவுத்தரோ சுயநினைவின்றி இருந்துள்ளார். அந்த நேரத்தில் கண்ணீருடன் கடிதம் ஒன்றினை எழுதி வைத்தார் விஜயகாந்த்.

அந்த கடிதத்தில், “நண்பா... நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுய நினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.

உன்னைக் கண்டவுடன் நாம் சிறுவயது முதல் கொண்ட உண்மையான நட்பும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் நாம் போராடி பெற்ற வெற்றி, தோல்விகளும் என் கண் முன்பே வந்து சென்றது. காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக் கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை.

இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. நண்பா மீண்டு வா எழுந்து வா...!" என்று கண்ணீருடன் எழுதியிருந்தார் விஜயகாந்த்.

’உழவர் மகன்’ டு ’சிம்மாசனம்’ - தயாரிப்பாளராக விஜயகாந்த்தை தாங்கி பிடித்த ராவுத்தர்!

விஜயகாந்த்தின் ஆரம்ப கால வாழ்க்கை தி.நகர் ராஜாபாதர் தெருவில் உள்ள ஒரு சிறிய அறையில் ரவுத்தர் உடன் தான் தொடங்கியது. விஜயகாந்திற்கான கதைத் தேர்வில் ராவுத்தரின் பங்களிப்பு அளப்பரியது. யாராவது விஜயகாந்தை அணுக நினைத்தால் முதலில் ராவுத்தரை தான் பார்ப்பார்கள். ராவுத்தர் சொன்னால் விஜயகாந்த் தட்டமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல், கதைத் தேர்விலும் ராவுத்தர் கெட்டிக்காரராக இருந்தார். அதற்கு ஒரு உதாரணம் தான் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் உருவான புலன் விசாரணை.

ரவுத்தர் பிலிம்ஸ் உள்ளிட்ட பல தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் விஜயகாந்த்தை வைத்து பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ராவுத்தர். ஐ.வி.சினி புரொடக்சன்ஸ் கீழ் கேப்டன் பிரபாகரன், சக்கரைத் தேவன், உளவுத்துறை ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாய் அமைந்தது. ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் உழவர் மகன், பரதன், தாய்மொழி, ராஜதுரை, கருப்பு நிலா, தர்மா ஆகிய படங்களையும், தமிழன்னை சினி கிரியேசன்ஸ் தயாரிப்பில் பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண், சிம்மாசனம் ஆகிய படங்களில் நடித்தார்.

விஜயகாந்த்தின் புகழ் இந்த உலகத்தில் பாடப்படும் காலம் வரையிலும் ராவுத்தர் - விஜயகாந்த் இடையிலான நட்பின் உன்னதும் ஓங்கி ஒலிக்கும்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com