லோகேஷ் கனகராஜின் மல்டிவெர்ஸில் விஜய் - த்ரிஷா? `கில்லி’ Vibe-க்கு ரெடியாகும் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜின் மல்டிவெர்ஸில் விஜய் - த்ரிஷா? `கில்லி’ Vibe-க்கு ரெடியாகும் ரசிகர்கள்!
லோகேஷ் கனகராஜின் மல்டிவெர்ஸில் விஜய் - த்ரிஷா? `கில்லி’ Vibe-க்கு ரெடியாகும் ரசிகர்கள்!

14 வருடங்களுக்குப் பிறகு நடிகர் விஜய் - நடிகை த்ரிஷா கூட்டணி இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன.

தென்னிந்திய சினிமாக்களில் உள்ள எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்து இன்றும் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் யாரென்றால், நிச்சயம் அது த்ரிஷாதான். தமிழ் சினிமாவில் இவர் கொடுத்த எவர்கிரீன் மூவிஸ் எக்கச்சக்கம்! கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நாயகியாக இருக்கும் த்ரிஷாவுக்கு, தமிழில் முதன்முதலில் மிக பிரமாண்ட வெற்றியை கொடுத்த முதல் படம் எதுவென்றால், அது நிச்சயம் நடிகர் விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த கில்லி படம்தான்.

கில்லி கொடுத்த வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜயுடன் இணைந்து த்ரிஷா, திருப்பாச்சி - ஆதி - குருவி என தொடர்ச்சியாக சில படங்கள் நடித்தார். `குருவி’ படத்துக்கு பிறகு, இருவரும் இணைந்து நடிக்கவில்லை. முதல் படமான கில்லி வெளியாகி கிட்டத்தட்ட 18 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும்கூட இன்றளவும் விஜய் - த்ரிஷா இருவருமே முன்னணி கதாநாயகன் கதாநாயகியாகவே தமிழ் சினிமாவில் உள்ளனர்.

ஒவ்வொரு முறை கில்லி பார்க்கும்போது, `அட இவங்க மறுபடி இணைந்து நடிக்கலாமே... செம நாஸ்டாலஜிக்கா இருக்கும்’ என நினைப்பவர்கள் ஏராளம். அப்படி நினைப்பவர்களின் வேண்டுதலுக்கிணங்க, தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

தற்போது வாரிசு படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய், அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகின்றன. இந்தப் படத்தில்தான் த்ரிஷா நடிக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இப்படத்தில் நடிகை சமந்தாதான் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக முதலில் செய்திகள் வெளிவந்தன. இப்போது அவருக்கு பதிலாக த்ரிஷா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

பெயரிடப்படாத அப்படத்தில், விஜய்க்கு எதிராக ஆறு வில்லன்கள் இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது படப்பிடிப்பிலுள்ள இயக்குநர் வம்சி - நடிகர் விஜய் கூட்டணியின் வாரிசு திரைப்படம், 2023 தமிழ் அல்லது தெலுங்கு வருட பிறப்பையொட்டி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல திரிஷா நடிப்பில் அடுத்ததாக இயக்குநர் மணிரத்னத்தின் பிரமாண்ட படமான பொன்னியின் செல்வன் ரிலீஸூக்கு காத்திருக்கிறது. இன்னும் சில படங்களிலும் நடிகை த்ரிஷா கமிட் ஆகி நடித்துவருகிறார். அவற்றை தொடர்ந்து, அவர் `தளபதி 67’-ல் இணைவார் என தெரிகிறது.

ஒருவேளை விஜய்யின் அடுத்தப்படத்தில் த்ரிஷா இணைந்தால், அப்படம் இவர்கள் இருவர் கூட்டணியில் 14 வருட இடைவெளிக்கு பிறகு வெளிவரும் படமாக இருக்கும். இருவர் நடிப்பில் வெளியாகும் 5-வது படமாக இருக்கும். நடிகர் விஜய் இதுவரை 5 முறை வேறெந்த நடிகையோடும் ஜோடியாக நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது முந்தைய படங்களில் `மல்டிவெர்ஸ்’ கான்செப்ட்-காக அதிகம் பேசப்பட்டவர் என்பதால், கில்லி படத்தில் விஜய் - த்ரிஷா மேஜிக் மீண்டும் இப்படத்தில் உருவாகலாம் என இருவரின் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் துள்ளிக்குதித்தபடி இருக்கின்றனர்!

லோகேஷ் கனகராஜூடன் நடிகர் விஜய் இணைந்த மாஸ்டர் திரைப்படத்திலேயே த்ரிஷா நடிப்பார் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் அது இல்லாமல் போனது. இந்நிலையில் இப்போது மீண்டும் இப்படியொரு பேச்சு தொடங்கியுள்ளது. இம்முறை ஒருவேளை அது நடந்தால், இருவரின் ரசிகர்களுக்கு `அப்படி போடு போடு’ வைப் நிச்சயம்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com