‘விஜய் 65’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘கோலமாவு கோகிலா’,‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ‘நெல்சன் திலீப்குமார்’இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்க இருப்பது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உறுதியானது. இந்தப்படத்தின் நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், இது குறித்து பேசிய பூஜா அதிகாரபூர்வமாக இன்னும் படக்குழு அவரை உறுதிசெய்யவில்லை என்றார்.
அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்தில், மெட்ராஸ், கே.ஜி.எப் உள்ளிட்ட படங்களில் சண்டை இயக்குநர்களாக பணியாற்றிய அன்பறிவ்வு சண்டை இயக்கம் செய்கின்றனர். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார். இந்நிலையில் தற்போது, விஜய் 65 படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்க இருப்பதாகவும், அதற்காக விஜய் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், “ விஜய் மற்றும் படக்குழு, அடுத்த மாதம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த ரஷ்யா செல்கின்றனர். விஜய் 65 படத்தின் பூஜை சென்னையில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக படத்தில் இடம் பெறும் கலைஞர்கள் தொடர்பான தகவல் வெளியாகும்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.