”எங்க டா அந்த மஞ்ச சாரீ..” விஜய்-த்ரிஷா நடனத்தில் பட்டைய கிளப்பிய ’மட்ட’ பாடல் வீடியோ வெளியீடு!
நடிகர் விஜய் லியோ திரைப்படத்திற்கு இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணைந்து நடித்து வெளியான திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்தப் படத்தில் நடிகர் விஜயுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இடம்பெற்று நடித்திருந்தனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்திருந்த இந்த படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
படம் வெளியாவதற்கு முன்புவரை வெளியிடப்பட்ட “விசில்போடு, சின்ன சின்ன கண்கள் மற்றும் ஸ்பார்க்’ முதலிய மூன்று பாடல்களுமே பெரியளவு ரசிகர்களை திருப்திபடுத்தவில்லை. ஆனால் திரைப்படம் வெளியான பிறகு இந்த மூன்று பாடல்களையுமே ரசிகர்கள் அதிகப்படியாக விரும்பிவருகின்றனர்.
விஜய் குரலில் மனம் கவர்ந்த ’தி கோட்’ பாடல்கள்..
நடிகர் விஜய் அரசியலுக்குள் முழுமையாக செல்வதற்கு முன்னதாக நடிக்கும் கடைசி திரைப்படங்களில் ஒன்று என்பதால் ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயை அனைத்துவிதமான எமோசன்ஸோடும் இயக்குநர் வெங்கட்பிரபு காட்சிப்படுத்தியிருப்பார். அதிலும் விஜய் குரலில் இரண்டு பாடல்கள் இடம்பெற்றதும், அந்த இரண்டு பாடலிலும் விஜய் குரல் ஏற்படுத்திய திருப்திகரமான உணர்வு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது.
அதிலும்,
“கொண்டாட தான் நீ பொறந்த காரணத்த ஏன் மறந்த,
மற்ற கண்ணில் சந்தோஷத்த பாக்க தானே கண் தொறந்த
எதிரி ஹார்ட்ட நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன்மேல ஏன் கோவம் ஃபீல் பன்னிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைஃப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ” என விஜய் குரலில் ஒலித்த விசில் போடு பாடல் செம்ம வைப் மோடை செட் செய்தது.
சின்ன சின்ன கண்கள் பாடலை பொறுத்தவரையில்,
”மழை பொழிகிற இரண்டாம் நாளில்
விழும் துளியில் மாசில்லை
இது ஒரு வகை இரண்டாம் பிறவி
வாழ்வில் இனிமேல் குறையில்லை..” என விஜய் குரலில் ஒரு ஆத்ம திருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
முதலில் ஸ்பார்க் பாடலில் இடம்பெற்ற விஜயின் டி-ஏஜிங் கெட்டாப்பால் அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்த அந்த பாடல், ஒரு மோசமான விமர்சனத்தை பெற்றிருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு ஸ்பார்க் பாடல் தொடங்கும் போது வரும் இசையும்,
”நீ கையால போட்ட ஒரு பிரேக்
அட உன்னால ஆனேன் படு வீக்கு
ஐயயோ மனசுக்குள்ள மாட்டிக்கிட்டு
மருந்த வச்சியே
கனவுக்குள் வந்து வந்து கலக்கிபுட்டாயே” என் பெண்குரலுடன் சேர்ந்து வந்து,
”கலங்குன மனச இப்ப தெளிய வெப்பேனே
தெளிஞ்சதும் இருக்கு மறுபடி வழக்கு” என முடியும் யுவனின் குரல் ரசிகர்களின் வைப் மெட்டீரியலாக மாறியுள்ளது.
மற்ற பாடல்களில் விஜயின் குரல் செய்த மாயாஜாலத்தை ‘மட்ட’ பாடலில் நடன அசைவுகள் ஏற்படுத்தியிருந்தன. அதிலும் மஞ்ச சாரீயில் த்ரிஷாவும், விஜயும் சேர்ந்து போடும் நடனங்கள் ரசிகர்களை தற்போதுவரை கட்டிப்போட்டுள்ளது. தி கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட பாடலின் வீடியோவை படக்குழு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் அதை கொண்டாடிவருகின்றனர்.