’உங்க ஸ்மைல் க்யூட்டா இருக்கு..’ காதலர்களின் ஆல்டைம் ஃபேவரட் ’சச்சின்’! மீண்டும் ரீ-ரிலீஸ்!
”கொஞ்சம் ஓவர் கான்ஃபிடன்ஸ் நம்ம ஷாலினி-ன்ற திமிரு,
ஃபோன் பண்ணுவிங்களா? பண்ண மாட்டன்; லெட்டர்? போட மாட்டன்; இ-மெய்ல்? அனுப்ப மாட்டன்; அட்லீஸ்ட் லவ்?,
மத்தவங்கள வேதனை படுத்துற சின்ன ஸ்மைல் கூட தப்பு தான்,
அவ்ளோ தானா ஷாலினி; கண்ணெல்லாம் ஒருமாதிரி கலங்குது; பொய்யா கூட சிரிக்க முடியல ஷாலினி,
நம்ம இங்க இருந்து யோசிக்கறத, அம்மா இங்க இருந்து யோசிப்பாங்க,
ஷட்-அப் சச்சின்”
கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் வெளியான சச்சின் திரைப்படம், காதலர்களின் எப்போதைக்குமான மனதை வென்ற திரைப்படமாக இன்றளவு இருந்துவருகிறது. கல்லூரி கலாட்டா, காதல், பிரிவு, வலி, அப்பா பாசம், அம்மா பாசம் என ஒரு ஃபுல்ஃபில் திரைக்கதையாக உருவாகியிருந்த சச்சின் திரைப்படம், இளைஞர்களை மட்டுமில்லாமல் அனைவரையும் கட்டிப்போட்டது.
அதிலும் அப்படத்தில் இடம்பிடித்த வடிவேலு காமெடி காட்சிகள் இன்றளவும் மீம் மெட்டிரீயலாகவும், ஸ்ட்ரெஸ் பஸ்டராகவும் இருந்துவருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான அனைத்து பாடல்களும், காதலர்களின் விருப்ப பாடலாக பிளே லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில் படம் வெளியாகி 20 வருடங்களை எட்டவிருக்கும் நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு, படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
20 ஆண்டுக்கு பின் ரீ-ரிலீஸாகும் சச்சின்..
இயக்குநர் ஜான் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான படம் ‘சச்சின்’. இந்தப் படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன், சந்தானம், பிபாசா பாசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அவரது இசையில் கண்மூடி திறக்கும் போது, வா வா என் தலைவா, வாடி வாடி கைப்படாத சீடி, குண்டுமாங்கா தோப்புக்குள்ள என இடம்பிடித்திருந்த அத்தனை பாடல்களும் இன்றளவும் விருப்ப பாடல்களாக உள்ளன. கலைப்புலி எஸ். தாணு தயாரித்த இந்தப் படம், கல்லூரி காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி காதலர்களின் மனதை வென்றது.
இந்நிலையில் இப்படத்தை 20 வருடங்களுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு எக்ஸ் தள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தின் ரீலீஸை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த காதலர்கூட்டம் எதிர்ப்பார்த்துள்ளது.