'20 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கை வேண்டும்' - இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்
இளைய தளபதியாக இருக்கும்போது தனது வாழ்க்கை ரெய்டுகள் இல்லாமல் அமைதியாக இருந்ததாக நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடிக்கும் 'மாஸ்டர்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய நடிகர் விஜய் நம்மை வரவேற்பவர்கள் நம் மீது கல் வீசுவோர் இருந்தாலும், நம் கடமையை செய்து கொண்டு நதியைப்போல பயணிக்க வேண்டும் என்று கூறினார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு இளைய தளபதியாக இருந்தபோது, தனது வாழ்க்கை ரெய்டுகள் இன்றி அமைதியாக இருந்ததாகவும், தனது நண்பர் அஜித் குமாரை போல கோட் சூட் அணிந்து வந்ததாகவும் விஜய் குறிப்பிட்டார்.
இதையடுத்து மாஸ்டர் திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடித்துள்ள விஜய் சேதுபதி பேசும்போது, கொரோனா வைரஸ் அச்சம் வேண்டாம் என்றும், மனஉறுதியோடு இருக்குமாறும் கேட்டுக் கொண்டார். அனைவரையும் தொட்டுப்பார்த்து மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு விஜய் சேதுபதி நன்றி கூறினார். கடவுளைக் காப்பாற்றுவதாகக் கூறுவோரை நம்ப வேண்டாம் என்றும், மனிதத்தைக் கற்று கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.