விஜய் சேதுபதியின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரமை வைத்து இயக்குநர் விஜய் சந்தர் இயக்கிய திரைப்படம் ‘ஸ்கெட்ச்’. இதில் வடசென்னை தாதாவிடம் அடியாளாக வேலை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விக்ரம். பெரிய எதிர்பார்ப்பை கிளப்பிய இந்தப் படம் வர்த்தக ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கு முன் சிம்புவை வைத்து ‘வாலு’ படத்தை இயக்கி இருந்தார் விஜய் சந்தர். அந்தப் படத்தின் போதுதான் ஹன்சிகாவின் காதல் பற்றிய செய்திகள் அதிகமாக வலம் வந்தன. சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடிப்பதால் பெரிய அளவுக்கு பிரமோஷன் இருந்தது.
ஆனால் அந்தப் படமும் பெரிய அளவுக்கு வெற்றி பெறவில்லை. இந்நிலையில் விஜய் சந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். கூடவே விஜய் சேதுபதியுடன் இருப்பதை போலவும் படத்தை வெளியிட்டுள்ளார். அவரது பதிவில், “இந்த அறிவிப்பை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் விரைவில் என்னுடைய அபிமான நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து படம் இயக்க இருக்கிறேன். இதனை விஜயா வாஹினி தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது” என்று அறிவித்துள்ளார்.