‘காத்துவாக்குல ரெண்டு காதலுக்காக’ உடல் எடையை குறைக்கும் விஜய்சேதுபதி

‘காத்துவாக்குல ரெண்டு காதலுக்காக’ உடல் எடையை குறைக்கும் விஜய்சேதுபதி

‘காத்துவாக்குல ரெண்டு காதலுக்காக’ உடல் எடையை குறைக்கும் விஜய்சேதுபதி
Published on

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்காக விஜய்சேதுபதி உடல் எடையைக் குறைக்க உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இதனை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பை அடைந்தது. இதில் மாற்றுத்திறனாளியாக நயன்தாரா நடித்திருந்தார். மிக வித்தியாசமான கதாபாத்திரம் என்பதால் நயன்தாராவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. விஜய்சேதுபதியும் மிக யதார்த்தமாக நடித்திருந்ததால் திரையில் தோன்றிய இந்த ஜோடி குறித்து மிகவும் பேசப்பட்டது.

அதனை அடுத்து இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கடந்த 14 ஆம் தேதி அறிவிப்பு வெளியானது. ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனத் தலைப்பிட்டுள்ள படத்தை தயாரித்து, இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன். இது வெற்றிக் கூட்டணி என்பதால் நிறைய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து சில விவரங்களை ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழிடம் பகிர்ந்து கொண்டுள்ளார் விக்னேஷ் சிவன். அவர் வழங்கியுள்ள பேட்டியில், “தலைப்பே எல்லாவற்றையும் விளக்கிவிடும். இது ஒரு வேடிக்கையான ரொமாண்டிக் திரைப்படமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் செய்ய திட்டமிட்டிருந்த ஸ்கிரிப்ட் இது. எழுதுவதற்கு நேரம் எடுக்கும், இதை உருவாக்க இதுவே சிறந்த நேரம் என்று நாங்கள் நினைத்தோம். விஜய்சேதுபதி, நயன் மற்றும் சமந்தா ஆகியோருக்கு இந்த ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்தது. கதை எழுதப்பட்ட விதம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. விஜய் தனது பாத்திரத்திற்காக எடையை குறைக்க உள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. “நாங்கள் தென் இந்தியாவிலும் அதைச் சுற்றியும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம்” என்று விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதற்கு அனிருத் இசையமைப்பார். மேலும் இதுகுறித்து விக்னேஷ், “அனிருத்துடன் இணைந்து பணியாற்றுவது எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும். அவர் எனக்கு சிறந்ததைத்தான் தருகிறார். இசை மீதான என் காதல் பற்றி அனைவருக்கும் தெரியும். நான் ஒரு பெரிய அனிருத் ரசிகன். படத்திற்காக பாடல்களை எழுத ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com