
‘ராஜா ராணி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் அட்லீ. இயக்கிய திரைப்படங்களை வெற்றிப் படங்களாக மட்டுமே தந்த இவர் தற்போது இந்தியில் ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர், யோகி பாபு, சிறப்புத் தோற்றத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். ‘ஜவான்’ படம், இயக்குநர் அட்லீ, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு பாலிவுட்டில் அறிமுகப் படம் என்பதால் ஏராளமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இப்படத்தின் Pre Release Event நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசும்போது, '' ஜவான் படத்தைப் பற்றி.. அட்லீயைப் பற்றி நிறைய சொல்லலாம். இயக்குநர் அட்லீ கலைஞர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும். அவர்களுக்கான சௌகரியத்தையும், சுதந்திரத்தையும் எப்படி அளிக்க வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்.
இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் முன் அட்லீயிடம் நிறைய விவாதிக்க வேண்டும் என சொன்னேன். 'வாங்கண்ணே.. நாம பண்ணலாம். என்ன வேணும்னாலும் பண்ணுங்க' என்றார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் என் கதாபாத்திரத்தை நன்றாகவே வடிவமைத்திருக்கிறார்.
நான் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். அது அந்த பெண்ணிற்கு தெரியாது. இது வழக்கமானது. ஜானு இல்லாமல் ராம் ஏது? ஆனால் அந்தப் பெண் ஷாருக்கானின் ரசிகை. அவரை காதலித்தார். அதுக்கு பழி வாங்க இத்தனை வருஷமாயிருக்கு.
ஷாருக்கானை முதன்முதலாக சந்தித்தபோது அவர் என்னிடம் நீங்கள் நல்ல நடிகர். உங்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது என சொன்னார். அதனை நான் இயல்பாக எடுத்துக் கொண்டேன். ஆனால் மீண்டும் ஒரு முறை வேறு இடத்தில் சந்தித்தபோதும் இதையே சொன்னார். அதற்காக இப்போது நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
யோகி பாபுவின் பஞ்ச் டயலாக் ஒவ்வொரு படத்திலும் பிரபலமாகும். அதன் பின்னணியில் அவருடைய கடின உழைப்பு இருக்கிறது. அது பெரும்பாலும் படப்பிடிப்பு தளத்தில் அவரே சொந்தமாக யோசித்து பேசுவார். படத்தில் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்து்கள். நன்றி'' என்றார்.