”அப்பா அடிச்சி வெளுத்துடுவார்.. அம்மா வேடிக்கை பார்ப்பாங்க” - விஜய் சேதுபதி மகன் சொன்ன தகவல்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் நடித்து பிரபலமான இந்திய நடிகராக வலம்வருகிறார். அவருடைய மகனான சூர்யா சேதுபதி ‘பீனிக்ஸ்’ என்ற திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவிருக்கிறார். இப்படத்தை சண்டைக்காட்சி இயக்குநரான அனல் அரசு இயக்கியுள்ளார்.
இப்படத்தில் வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி உள்ளிட்ட பலநடிகர்கள் நடித்துள்ள நிலையில், சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஜூலை 4-ம் தேதி திரையரங்கில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அப்பா அடித்ததை ஜாலியாக சொன்ன சூர்யா..
மகன் சூர்யா சேதுபதி குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகர் விஜய் சேதுபதி, “என் மகளை அடிக்கவே மாட்டேன், ஆனால் என் மகனை வெளுத்து வாங்கிவிடுவேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அப்பா குறித்து மகன் சூர்யா அளித்துள்ள பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அப்பா குறித்து பேசிய சூர்யா “அப்பா என்னை கராத்தே கிளாஸ், பாக்ஸிங் கிளாஸுக்கு எல்லாம் போகச்சொல்வார். அதற்கெல்லாம் நான் போக மாட்டேன் என சொல்லும்போது அடி வெளுத்துவிடுவார், என் அம்மா நல்லா அடிவாங்கட்டும் என வேடிக்கை பார்ப்பாங்க” என்று ஜாலியாக தெரிவித்துள்ளார்.
பீனிக்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி மகன் குறித்து பேசினார். அப்போது, ”சின்ன வயதில் இருந்தே அவனுக்கு ‘மாஸ்’ படம் தான் மிகவும் பிடிக்கும். ஒருவேளை அவனுக்கு படம் அமைந்திருந்தால் கூட அனல் அரசு மாஸ்டரை வைத்து சண்டை காட்சி எடுத்திருக்க முடியுமா என தெரியவில்லை. ஆனால் அனல் அரசு மாஸ்டர் மூலமாக அவர் சினிமாவில் அறிமுகமாவது ஒரு பாக்கியமாக கருதுகிறேன்.
சூர்யாவை முதன் முதலில் பள்ளியில் சேர்க்கும் போது ஒரு உணர்வு இருந்தது. அதே போலத் தான் இப்போதும் இருக்கிறது. என்னுடைய முதல் பட இசை வெளியீட்டு விழா நடந்த போது ஏற்பட்ட படபடப்பை விட இப்போது பல மடங்கு படபடப்போடு இருக்கிறேன். ஆனாலும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
என் மகன் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள கூடியவன், அதனால் அவன் முடிவுகளை அவனே எடுக்கட்டும் என விட்டுவிடுவேன்” என்று பேசினார்.