விரைவில் ரிலீசாகிறது விஜய்சேதுபதியின் இடம்பொருள் ஏவல்!
விஜய் சேதுபதி நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது என அப்படத்தின் இயக்குநர் சீனுராமசாமி தெரிவித்துள்ளார்.
விஜய்சேதுபதி, விஷ்ணு விஷால் நடித்த இடம் பொருள் ஏவல் படவேலைகள் முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் பல்வேறு பிரச்னைகளால் ரிலீசாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து விஜய் சேதுபதியை வைத்து சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக இயக்குநர் சீனுராமசாமி தெரித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இடம்பொருள் ஏவல் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆடிக்காற்றில் தலையசைக்கும் தென்னங்கீற்றாக மனம். தெய்வத்தின் கருணை மனிதர்களின் கரங்களின் மூலம் நடக்கிறது. முயற்சிக்கும் லிங்குசாமி, போஸ் சகோதர்களுக்கும் ஆதரவு தருவோர்க்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் மாமனிதன் படப்பிடிப்பு வேலைகளில் சீனுராமசாமி ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரிக்க இருக்கிறார். மாமனிதன் படத்திற்கு தனது தந்தை இளையராஜாவுடன் இணைந்து யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.