விஜய் சேதுபதியின் ‘மாமனிதன்’படப்பிடிப்பு தொடங்கியது
நடிகர் விஜய்சேதுபதி அடுத்து நடிக்கவிருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத பிஸியான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இவர் 2010 ஆம் ஆண்டு ‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை சீனு ராமசாமி இயக்கினார். அதில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய விஜய் சேதுபதிக்கு பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்தது.
‘பீட்சா’,‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு ‘தர்மதுரை’ எனும் படத்தில் சீனு ராமசாமியும் விஜய் சேதுபதியும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். அப்படம் சூப்பர் ஹிட் ஆனது.
அதையடுத்து தற்போது ‘மாமனிதன்’ படம் மூலம் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ பட கதாநாயகி காயத்ரி நடிக்கிறார். இந்தப் படத்தில் இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கின்றனர்.
முன்னதாக விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சீதக்காதி’ படம் வரும் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘பேட்ட’ படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படம் வரும் பொங்கல் அன்று திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

