”விஜய்சேதுபதியின் மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்” - சென்னை உயர்நீதிமன்றம்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திற்கு விதித்த தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை காயத்ரி நடித்த 'மாமனிதன்' திரைப்படம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து இசை அமைத்துள்ளனர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்து விட்டதால், படக்குழு படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அந்த நிலையில் தான் மாமனிதன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி அபிராமி மெகா மால் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் ‘மாமனிதன்’ திரைப்பட சென்னை விநியோக உரிமையை கிளாப் நிறுவனத்திடம் இருந்து தாங்கள் வாங்கியிருப்பதாகவும், ஆனால் தற்போது அந்த உரிமையானது தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதால் மாமனிதன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், மாமனிதன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்திருந்தார். இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் , அபிராமி மெகா மால் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் யுவன்சங்கர்ராஜா விநியோக உரிமை தொடர்பாக எந்த உரிமையும் கோரவில்லை என்றும், அந்த ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதால், படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.இதைக் கேட்ட நீதிபதி கார்த்திகேயன், மாமனிதன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார்.