‘தெலுங்கு ஹீரோக்களுக்குத் தான் முன்னுரிமை’ - பணிந்த ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜு!

‘தெலுங்கு ஹீரோக்களுக்குத் தான் முன்னுரிமை’ - பணிந்த ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜு!
‘தெலுங்கு ஹீரோக்களுக்குத் தான் முன்னுரிமை’ - பணிந்த ‘வாரிசு’ தயாரிப்பாளர் தில் ராஜு!

தெலுங்கு நேரடிப் படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘வாரசுடு’ திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

வாரிசு/வாரசுடு:

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிப்பில், தமன் இசையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம், வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் ‘வாரசுடு’ என்றப் பெயரில் சங்ராந்தியை (பொங்கலை) முன்னிட்டு ஆந்திரா மற்றும் தெலங்கானாவில், தமிழ்நாட்டில் வெளியாகும் தேதியிலேயே வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டது.

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்:

ஆனால், இதற்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில், தெலுங்கு திரையுலகின் உச்ச நடிகர்களான சிரஞ்சீவியின் ‘வால்டர் வீரய்யா’ மற்றும் பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’ ஆகியப் படங்களும் சங்ராந்தியை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், ‘வாரிசு’ திரைப்படத்திற்கு அதிகக் காட்சிகள் ஒதுக்குவதில் சிக்கல் எழுந்தது. மேலும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தால் தெலுங்கு திரைப்படங்கள் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புண்டு என கருத்து நிலவியது.

இதனால், “தெலுங்கு திரைப்படத் துறையைக் காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் சங்கராந்தி மற்றும் தசரா ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் உள்ளது, எனவே வினியோகஸ்தர்கள் இந்த முடிவைப் பின்பற்றவேண்டும்" என தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.

‘பேட்ட’ படத்தை சுட்டிக்காட்டி ‘வாரிசு’க்கு எழுந்த சிக்கல்:

மேலும் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 10-ம் தேதி ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ திரைப்படம், தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியிடப்படவிருந்தது. அப்போது தெலுங்கில் அதே சமயத்தில் பாலகிருஷ்ணாவின் ‘என்டிஆர் கதாநாயகுடு’, ராம்சரணின் ‘வினய விதேய ராமா’, வருண் தேஜாவின் ‘F2’ ஆகிய நேரடி திரைப்படங்கள் வெளியாகவிருந்தன. நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு முன்னுரிமை என்பதை சுட்டிக்காட்டி, ‘பேட்ட’ திரைப்படத்துக்கு மிகக் குறைந்த அளவிலான திரையரங்குங்களே ஒதுக்கப்பட்டிருந்தன.

இதனால் கோபமடைந்த 'பேட்ட' திரைப்படத்தின் தெலுங்கு வினியோகஸ்தர் அசோக், பிரபல தயாரிப்பாளர் தில்ராஜூ உள்ளிட்டோரை 'தியேட்டர் மாஃபியா' எனும் கடுமையான சொற்களால் வறுத்தெடுத்திருந்தார். இதையடுத்து தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய தில் ராஜூ, “அசோக் எங்களைப் பற்றி தரம் குறைந்த வார்த்தைகளை கூறி வருகிறார். என்னால் அவரைப் போல பேச முடியாது. நான் யாரையும் தொந்தரவு செய்யவில்லை. பெரிய பட்ஜெட்டில் உருவாகும் எங்கள் சொந்த திரைப்படங்களுக்கு தியேட்டர்கள் வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதையே தற்போது விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் காரணம் காட்டியிருந்தது.

தமிழ் இயக்குநர்கள் ‘வாரிசு’ படத்துக்கு ஆதரவு:

இதையடுத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, பேரரசு மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசினர். தெலுங்கில் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகையின்போது வெளியாகவில்லை என்றால், ‘வாரிசு’க்குப் பின், ‘வாரிசு’க்கு முன் என்ற நிலை உண்டாகும் என்று காட்டம் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் முரளி, தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் சுமூக முடிவு எட்டப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால், ‘வாரிசு’ திரைப்படம் ஆந்திராவிலும் வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான், தெலுங்கில் ‘வாரிசு’ படம் வரும் 14-ம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார்.

தில் ராஜு பேட்டி:

இதற்கு அவர் காரணமாக கூறியது என்னவெனில், “தெலுங்கில் பெரிய நடிகர்களான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியின் படங்கள் 12 மற்றும் 13-ம் தேதிகளில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கு நடிகர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். ‘வாரிசு’ படம் அவர்களுக்கு போட்டி இல்லை. தெலுங்கு திரையுலகம் எனது முடிவால் மிகப்பெரிய சந்தோஷத்தில் இருக்கிறது. தாமதமாக வந்தாலும் குடும்பப் படமான ‘வாரிசு’ தெலுங்கில் நல்ல வெற்றிபெறும்.

அனைத்துப் படங்களும் நன்றாக ஓட வேண்டும். படம் நல்ல முறையில் ஓடி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரும் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்க வேண்டும், அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

துணிவு Vs வாரிசு

ரஜினியின் ‘பேட்ட’ படத்திற்கு தில் ராஜு கூறிய காரணம், தற்போது அவரது தயாரிப்பான விஜய்யின் ‘வாரிசு’ படத்துக்கே சிக்கல் எழுந்து திரும்பியுள்ளது. சொல்லப்போனால் விஜய்யின் மிகப் பிரபல வசனமான ‘வாழ்க்கை ஒரு வட்டம்’ என்ற வசனம் (கர்மா ஈஸ் பூமரங்) அவருக்கே இன்று திரும்பியுள்ளது. ஆனால் அதேநேரத்தில் எந்தச் சத்தமும் இன்றி அஜித்தின் ‘துணிவு’ படம் ‘தெகிம்பு’ என்றப் பெயரில் வரும் 11-ம் தேதியே தெலுங்கில் வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் விஜய் தான் நம்பர் 1 என்றும், அதனால் அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட் மூவீஸிடம் சென்று ‘வாரிசு’ படத்துக்கு அதிகக் காட்சிகள் வேண்டும் என்று கேட்கப் போகிறேன் என்றெல்லாம் தில் ராஜு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com