‘அந்த ரத்தம் வெறும் சாக்லேட் தானா?’.. ஏமாற்றியதா ‘தளபதி 67’ புரோமோ? Vikram Vs Leo ஒப்பீடு!

‘அந்த ரத்தம் வெறும் சாக்லேட் தானா?’.. ஏமாற்றியதா ‘தளபதி 67’ புரோமோ? Vikram Vs Leo ஒப்பீடு!
‘அந்த ரத்தம் வெறும் சாக்லேட் தானா?’.. ஏமாற்றியதா ‘தளபதி 67’ புரோமோ? Vikram Vs Leo ஒப்பீடு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் புரோமோ வெளியாகியுள்ளது.

‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் விஜய் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து இணைந்துள்ள திரைப்படம் ‘தளபதி 67’. இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த வருடமே வெளியானாலும், கடந்த மாதம் 30-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 100 சதவிகிதம் தனதுப் படமாக இருக்கும் என லோகேஷ் அறிவித்திருந்ததால், இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. மேலும், இந்தப் படத்தில் ‘கே.ஜி.எஃப் 2’ படத்திற்குப் பிறகு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிப்பதாக அறிவிக்கப்பட்டதால் எதிர்பார்ப்பு எகிறிய வண்ணம் இருந்தது.

கடந்த சில தினங்களாகவே ‘தளபதி 67’ படம் குறித்த அறிவிப்புகள் குவிந்த வணணம் இருந்தன. அதன் உச்சகட்டமாக இன்று மாலை 5 மணிக்கு படத்தின் டைட்டில் புரமோ வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் ‘லியோ’ என்ற புரோமோ அறிவிப்பு மற்றும் ரிலீஸ் தேதியுடன் வெளியாகியுள்ளது.

ஆயுத பூஜை (அக். 23-ம் தேதி திங்கள் கிழமை), விஜயதசமி (அக். 24-ம் தேதி செவ்வாய் கிழமை) விடுமுறை நாட்களை குறிவைத்து, படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே வெளியான தகவலின்படி, படக்குழு அதனை உறுதி செய்துள்ளது.

விக்ரம் சாயலில் புரமோ.. ஆனால்?

படத்தின் டைட்டில் புரோமோ ‘விக்ரம்’ படத்தின் புரோமோவைப் போன்றே உள்ளது. அந்தப் படத்தில் மலைப் பகுதியைச் சேர்ந்த தனியான ஒரு வீட்டில் நடிகர் கமல்ஹாசன் தனது எதிராளிகளுக்கு ‘அசைவ விருந்து’ வைப்பதுபோலும் ‘ஆரம்பிக்கலாங்களா’ என்றும் தொடங்கும் வகையில் புரோமோ வெளியாகி இருக்கும்.

இந்தப் படத்திலும் அதேமாதிரியான சூழலில் ஒரு விஜய் கத்தியை தீட்டுவதும் போன்றும், டிப் டாப்பான மற்றொரு விஜய் சாக்லேட் உருவாக்குவது போன்றும், இறுதியில் சாக்லேட்டில் கத்தியை நனைத்து ‘Bloody Sweet' என்று சொல்வதுபோல் உள்ளது. கொடைக்கானல் லொக்கேஷன் கண்களுக்கு விருந்து படைப்பதுபோல் உள்ளது. அதில் தீவிரவாதிகள் போன்று முகமூடி அணிந்தவர்கள் பல கார்களில் விஜய் இருக்கும் இடத்திற்கு வருவதுபோல் உள்ளது. 

ஆனால், விக்ரம் படத்தில் இருந்த மாஸான ஒரு உணர்வை இந்த புரமோவில் நம்மால் அடைய முடியவில்லை. விக்ரம் புரமோ செம்ம கெத்தாக இருந்தது. படத்திற்கு நேரடியாக தொடர்பு இல்லாவிட்டாலும் அந்த புரோமோ காட்சிகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை விக்ரம் படத்தின் மீது ஏற்படுத்தியது. 

விக்ரம் Vs லியோ

‘விக்ரம்’ பட புரமோ வீடியோ மற்றும் ‘லியோ’ புரமோ வீடியோ இரண்டும் ஒரே இடத்தில், கிட்டதட்ட ஒரே மாதிரியாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்து கேமிரா உள்ளே சென்றதும் பேக் ஷாட்டில் விக்ரமில் கமல்ஹாசனும், லியோவில் விஜய்யும் இருப்பார்கள். லியோவில் வருவது ஒரு சாக்லேட் தொழிற்சாலை. இரண்டிலும் வரும் ஒரு ஒற்றுமையை இங்கு கவனிக்கலாம்.

‘விக்ரம்’ படத்தில் எல்லோரையும் கொல்வதற்காக திட்டமிட்டு அவர்களை விருந்துக்கு கமல் அழைத்திருப்பது போல் இருக்கும். கமல் வைத்த விருந்தில் வந்து சிக்கிக் கொள்வார்கள் அனைவரும். விருந்திற்கு வந்தவர்கள் அனைவரும் முகமூடி அணிந்திருப்பார்கள். அதேபோல், ‘லியோ’வில், விஜய் இருக்கும் இடத்தை நோக்கி காரில் முகமூடி அணிந்த பலரும் வருகிறார்கள். இடையில் ஒரு காட்சி சிம்பாலிக்காக வருகிறது. அதாவது, பாம்பு ஒன்றும் அந்த இடத்தில் நுழைகிறது. ஆனால், அதற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பொறியில் சிக்கி தலை துண்டாகி இறந்துவிடுகிறது.  

ஏமாற்றியதா டைட்டில் புரமோ!

ரத்தம் தெறிக்க வரையப்பட்ட விஜய்யின் படத்தை படக்குழுவினர் நேற்று பகிர்ந்த நிலையில், எதிர்பார்ப்பு எகிறி இருந்தது. டைட்டில் இதுவாக இருக்குமோ? அதுவாக இருக்குமோ? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போட்டி போட்டு பல டைட்டில்களை குறிப்பிட்டு வந்தார்கள். அதில் குறிப்பாக குருதி என்ற டைட்டில் பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. ‘குருதிப் புனல்’ படத்துடன் ஒப்பிட்டு பலரும் கூறி வந்தார்கள். ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார்போல் இல்லாமல் இது வேறு மாதிரியான டைட்டிலாக வந்துள்ளது.

ரத்தம் தெறிக்க படம் வெளியாகி இருந்த நிலையில், அந்த கருஞ்சிவப்பு நிறம் எல்லாம் கடைசியில் வெறும் சாக்லேட் தானா என்று சிலர் தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் வழக்கம்போல் விஜய் ரசிகர்கள் இந்த புரோமோவை தாறுமாறாக கொண்டாடி வருகிறார்கள். 

இசை மற்றும் புரோமோ ஏமாற்றத்தை தந்துள்ளது எனலாம். மேலும், ‘மாநகரம்’, ‘கைதி’, ‘விக்ரம்’ என டைட்டிலிலேயே கவனம் ஈர்த்த லோகேஷ், விஜய்யின் படங்களுக்கு மட்டும் ‘மாஸ்டர்’, ‘லியோ’ என ஆங்கிலத்தில் பெயர் வைத்து வருகிறார். எனினும், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பதால், அடுத்து வெளியாகும் டீசர் மிரட்டலாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் Vs லியோ!

லியோ படத்தின் புரமோவில் இரண்டு விதமான விஜய்யின் தோற்றம் இருக்கிறது. ஒன்று மாஸ்டர் படத்தில் வருவதுபோன்ற டக் இன் செய்த டிப் டாப்பான விஜய். அவர் சாக்லேட் செய்து கொண்டிருகிறார். மற்றொரு விஜய் பணியனில் இருக்கிறார். அவர் வாள் ஒன்றினை தயார் செய்து கொண்டிருக்கிறார். இறுதியில் சாக்லேட்டில் அந்த வாளை தொய்க்கிறார். பிளாடி சுவீட் என்று விஜய் கூறுவது போல் புரமோ முடிகிறது. மாஸ்டர் படத்துடன் லியோ ப்ளேவர் ஒத்துப் போவதுபோல் உள்ளது. 

ஏன் மலையாளம் இல்லை?

‘லியோ’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் வெளியாகும் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் மலையாளம் இடம்பெறவில்லை. விஜய்க்கு மலையாளத்தில் அதிக அளவில் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அப்படி இருக்கையில் ஏன் மலையாளத்தில் படம் வெளியாகவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை நேரடியாக தமிழில் வெளியிட்டாலே போதுமானது என்று நினைத்துவிட்டார்களோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com