“வெறித்தனம், அற்புதம்...” - ‘பிகில்’ ட்ரெய்லருக்கு குவியும் பிரபலங்களின் பாராட்டு
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ‘பிகில்’ படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே ட்ரெய்லர் பட்டய கிளப்பும் வகையில் அமைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் பிரம்மாண்டமான பின்னணி இசைதான்.
படத்தில் அதிரடியாக சண்டை காட்சிகள் இருக்கும் என்பது ட்ரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. ட்ரெய்லரில், ‘இந்த விளையாட்டால் தான் உங்க அடையாளமே மாறப்போகுது’, ‘எங்களுக்கு புட்பால்லாம் தெரியாது எங்க ஆட்டம் வெறித்தனமாக இருக்கும்’ போன்ற சார்ப்பான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. கால்பந்து வீரராக, பயிற்சியாளராக இளமையான தோற்றத்திலும், வயதான தோற்றத்தில் சற்றே அதிரடியாகவும் விஜய் காட்சி அளிக்கின்றார்.
ட்ரெய்லரை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். யூடியூப்பில் கடந்த 3 மணி நேரத்தில் சுமார் 8 லட்சம் பேர் ட்ரெய்லரை பார்வையிட்டுள்ளனர். இதனிடையே, பிகில் ட்ரெய்லரை பல்வேறு பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர். நடிகை சமந்தா தன்னுடைய ட்விட்டரில், ‘வெறித்தனம் நண்பா..’ என புகழ்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தன்னுடைய ட்விட்டரில், ‘படம் சிறப்பான ஒன்றாக அமைய நண்பர்கள் அட்லி, விஜய் மற்றும் ஏர்.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு என்னுடைய வாழ்த்துகள். சக் தே இந்தியா படம் போல் உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், பாலிவுட் நடிகர் வருண் தவான், ‘மிகவும் அற்புதமான ட்ரெய்லர்’ என பாராட்டியுள்ளார்.
அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, விவேக், கதிர், யோகி பாபு என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ள இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.