“தி சி.எம் ஆஃப் தமிழ்நாடு” - விஜய் ரசிகர்களின் வெறித்தன போஸ்டர்..!
மதுரையில் “THE CM OF TAMILNADU ” என ‘பிகில்’ திரைப்படத்தை வரவேற்கும் விதமாக ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தலைவா’ திரைப்படம் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியானது. குறிப்பிட்ட தேதியில் இப்படம் தமிழகத்தில் வெளியாகவில்லை. அதற்கு காரணம் ஆளுங்கட்சிக்கு எதிரான கோபத்தை நடிகர் விஜய் சம்பாதித்தார் என்றே கூறப்பட்டது. அரசியல் நோக்கத்திற்காகவே தனது படத்திற்கு விஜய் ‘தலைவா’ என பெயர் வைத்தது மட்டுமல்லாமல், அடைமொழியாக ‘டைம் டூ லீட்’ என்ற வாசகத்தையும் இணைத்திருந்ததாக அப்போது ஒரு புகார் எழுந்தது. இது ஆளும் அரசை மேலும் கடுப்பாக்கியதாக கூறப்பட்ட நிலையில், படம் வெளியீட்டு தேதிக்கு முந்தைய நாள், தியேட்டர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் எழுந்தன.
இதனையடுத்து படம் வெளியாகுவதற்கு உதவுமாறு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார். அதன்பிறகு டைம் டூ லீட் என்ற வாசகமும் சில காட்சிகளும் நீக்கப்பட்டு படம் ஒருவழியாக வெளியானது. இதைத்தொடர்ந்து ஜெயலலிதா மறைவிற்கு பிறகு விஜய் நடிப்பில் வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தில் ஆளுங்கட்சியின் திட்டங்களை விமர்சிக்கும் வகையில் பல காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதற்காக ஆளுங்கட்சி பிரமுகர்களும் அமைச்சர்களும் விஜய்க்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் போராட்டங்களும் நடைபெற்றன.
அப்போதிலிருந்து விஜய் படத்திற்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது என்றே கூறலாம். அந்த வகையில் தற்போது பிகிலுக்கும் பல சிக்கல்கள் எழுந்துள்ளது. பிகில் படத்தின் ஆடியோ ரிலீஸில் பேசிய விஜய் ஆளுங்கட்சியை மறைமுகமாக தாக்கி சில கருத்துகளை பதிவு செய்தார். இதுவும் வழக்கம்போல் புகைந்தது.
அதன் எதிரொலியாக கதை திருட்டு, அதிக டிக்கெட் விலை நிர்ணயம், சிறப்புக் காட்சிகள் ரத்து என பல சிக்கல்கள் பிகில் படத்தின் வெளியீட்டுக்கு முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன. வரும் 25-ஆம் தேதி பிகில் திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் ஒவ்வொரு தடைக்கற்களையும் விஜய் தரப்பு சிறிது சிறிதாக புறந்தள்ளி வருகிறது.
இந்நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டிகள் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. மதுரையில் தல்லாகுளம், சிம்மக்கல், கோரிப்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில், அரசியல் தலைவர்களுக்கு மறைமுகமாக சவால் விடுக்கும் வகையில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், ‘THE CM OF TAMILNADU’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டி, மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொறுப்பாளர் தங்கபாண்டி பெயரால் ஒட்டப்பட்டுள்ளது.
CM என்பதற்கு விளக்கமாக ஆங்கிலத்தில் கேப்டன் மைக்கேல் என அச்சிடப்பட்டுள்ளது. மைக்கேல் என்பது பிகிலில் விஜய் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் என்பது அனைவரும் அறிந்ததே.