‘குஷி’ படப்பிடிப்பில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயமா? - படக்குழு விளக்கம்

‘குஷி’ படப்பிடிப்பில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயமா? - படக்குழு விளக்கம்
‘குஷி’ படப்பிடிப்பில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயமா? - படக்குழு விளக்கம்

காஷ்மீரில் நடைபெற்று வந்த ‘குஷி’ படப்பிடிப்பின்போது, நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை சமந்தா காயம் அடைந்ததாக தகவல் வெளியானநிலையில், அதனை படக்குழு மறுத்து விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அதேபோல் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர்கள் இருவரும், கீர்த்தி சுரேஷின் ‘மகாநதி’ படத்திற்குப் பிறகு இணைந்து புதியப் படம் ஒன்றில் நடித்து வருகின்றனர். ஷிவ நிர்வாணா இயக்கும் இந்தப் படத்திற்கு தற்காலிகமாக ‘விடி11’ என்று பெயரிடப்பட்டநிலையில், காஷ்மீரில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 9-ம் தேதி ‘குஷி’ என்ற டைட்டிலுடன், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. காதல், குடும்பம் மற்றும் ஆக்ஷன் நிறைந்த படமாக இந்தப் படம் உருவாகி வந்தது. இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து, நேற்று படக்குழு ஹைதராபாத் திரும்பியதாக புகைப்படங்கள் வெளியான நிலையில், காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஆக்ஷன் காட்சியை படமாக்கும்போது விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆற்றில் விழுந்து காயம் அடைந்ததாகவும், பின்னர் இருவரும் மீட்கப்பட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், பிசியோதெரபிஸ்ட் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகவும் செய்திகள் வெளியானது.

ஆனால் இந்த செய்தியில் உண்மை இல்லை என்று படக்குழு மறுத்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘குஷி’ படப்பிடிப்பின் போது விஜய்தேவரகொண்டா மற்றும் சமந்தா காயம் அடைந்ததாக சில செய்திகள் வருகின்றன. இந்த செய்தியில் உண்மையில்லை. காஷ்மீரில் 30 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, நேற்று ஒட்டுமொத்த குழுவும் ஹைதராபாத் திரும்பியது. இதுபோன்ற பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படக்குழுவினர் படப்பிடிப்பிலிருந்து திரும்பியபோது விஜய்தேவரகொண்டா, இயக்குநர் ஷிவ நிர்வாணா மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் காரின் பின்பக்கம் மகிழ்ச்சியுடன் இருந்ததை, சமந்தா புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை இயக்குநர் ஷிவ நிர்வாணா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘குஷி’ படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா உடன் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி ஷர்மா, லக்ஷ்மி, அலி, ரோகிணி, வெண்ணிலா கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா ஆகியோர் நடிக்கின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 23-ம் தேதி வெளியாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com