ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 65’ - ஏப்ரல் இறுதியில் வேலைகள் ஆரம்பம்?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 65’ - ஏப்ரல் இறுதியில் வேலைகள் ஆரம்பம்?
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘விஜய் 65’ - ஏப்ரல் இறுதியில் வேலைகள் ஆரம்பம்?

ஏ.ஆர்.முருகதாஸின் ‘துப்பாக்கி 2’ படத்திற்காக வேலைகள் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜயை வைத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்திற்கான இசை வெளியீட்டு விழா, சமீபத்தில் நடைபெற்றது. மேலும் இப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா அச்சம் நிலவி வருவதால் இம்மாதம் இறுதி வரை திரையரங்கங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகவே ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜயின் ‘தளபதி65’ குறித்து ஒரு தகவல் கசிந்தது. ஏற்கெனவே வெற்றிமாறன், சுதா கொங்கரா, பேரரசு உள்ளிட்ட சில இயக்குநர்கள் பெயர்கள் அடிப்பட்டன. இதில் யாராவது ஒருவர் ‘தளபதி65’ படத்தை இயக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில் இப்போது இந்தப் பட்டியலை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு புதியதாக ஏ.ஆர்.முருகதாஸ் பெயர் முன்னுக்கு வந்தது.

சுதா கொங்கரா, நடிகர் விஜய்க்கு சொன்ன கதைக்கான முன்தயாரிப்பு பணிகளுக்கு அதிககாலம் தேவைப்படுவதால் அந்தத் திட்டத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸை விஜய் தேர்வு செய்துள்ளதாகக் தகவல் கசிந்தது. ஆகவே விஜயின் புதிய படத்தினை இவர் இயக்கலாம் எனக் கூறப்பட்டது. இவரது இயக்கத்தில் ஏற்கெனவே ‘துப்பாக்கி’, ‘கத்தி’,‘சர்கார்’ என மூன்று படங்களில் விஜய் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே விஜயின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளன.

இந்தத் திட்டத்தின்படி இயக்குநர் முருகதாஸ் ‘துப்பாக்கி2’ இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனை சன் பிக்சர் தயாரிக்கலாம் என்றும் தகவல் கசிந்தது.

இந்நிலையில், ‘விஜய் 65’ குறித்து மேலும் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி ‘துப்பாக்கி2’ படத்திற்கான வேலைகள் ஏப்ரல் மாதம் இறுதியில் தொடங்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் கொரோனா குறித்த அச்சம் நீடித்தால் இந்தத் திட்டத்தின் மாற்றம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து படக்குழுவோ விஜய் தரப்போ எந்தச் செய்தியையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com