`விஜய் 66’ படப்பிடிப்பு தொடங்கியது - ட்ரெண்டாகும் பூஜை ஃபோட்டோஸ்

`விஜய் 66’ படப்பிடிப்பு தொடங்கியது - ட்ரெண்டாகும் பூஜை ஃபோட்டோஸ்

`விஜய் 66’ படப்பிடிப்பு தொடங்கியது - ட்ரெண்டாகும் பூஜை ஃபோட்டோஸ்
Published on

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இன்னும் சில தினங்களில் திரைக்கு வரவுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த படத்துக்கான படப்பிடிப்பு வேலைகள் இன்றிலிருந்து தொடங்குகிறது.

இன்னும் பெயரிடப்படாத விஜயின் அடுத்த படம், `தளபதி 66’ என்ற அடைமொழியுடன் படப்பிடிப்புக்கு தயாராகி தொடங்கியுள்ளது. இப்படம் குறித்த அறிவிப்பானது, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே வெளியாகியிருந்தது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளது. இந்தப் படத்தை எஸ்.வி.சி. கிரியேஷன் தயாரிக்கிறது. தமிழில் கார்த்தி, நாகர்ஜூனா நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தின் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையில் இப்படம் உருவாகிறது. நடிகை ராஷ்மிகா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் தெலுங்கு திரையலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. தளபதி 66 படத்தின்மூலம், நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கில் நேரடி படமொன்றின் மூலமாக அறிமுகமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், விஜய் 66 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர் தில் ராஜு, தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், “வம்சி சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதுபோல், படத்தின் கதையைக் கேட்டப்பிறகு நடிகர் விஜயும், ‘இதுபோல் ஒரு கதையைக் கேட்டு 20 வருடங்களாக ஆச்சு’ என்று சென்னார். ஒரு பெரிய நடிகர் இவ்வாறு கூறும்போது, படக்குழுவுக்கு அது ஒரு புது நம்பிக்கையை கொடுக்கும். இந்தப் படம் விஜய் நடிப்பில் வெளியான ‘பூவே உனக்காக’, ‘காதலுக்கு மரியாதை’ போன்று நல்ல குடும்பப் படமாக இது இருக்கும்” என்று கூறியிருந்தார்.

மேலும் “திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடைபெற்றால், விஜய் 66 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும். கொரோனா காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானால், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும்” என்றும் தயாரிப்பாளர் தில் ராஜு கூறியிருந்தார். சென்னையில் ஒருவாரத்துக்கு நடக்க உள்ள படப்பிடிப்பில், விஜய் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கவேண்டிய பகுதிகள் படமாக உள்ளன. முன்னதாக இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிக்கிறாரா என்பது குறித்து சந்தேக கேள்விகள் தொடர்ந்து வந்தது.

ராஷ்மிகாவின் பிறந்தநாளான நேற்று, அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து இப்படத்தில் அவர்தான் நடிக்கிறார் என்று படக்குழு உறுதி செய்தது. படத்தின் பூஜையில் நடிகர் சரத்குமாரும் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்து, அவரும் படத்தில் இருக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றது.

பீஸ்ட் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அடுத்த படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளிவருவது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com