“அய்யோ, அம்மா, ஆடியோ லான்ச்” - கொந்தளித்த ‘பிகில்’ விஜய் ரசிகர்கள்
விஜயின் ‘பிகில்’ பட இசை வெளியிட்டு விழாவின் எதிரொலியாக சமூக வலைத்தளங்களில் இரண்டு ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன.
அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பிகில்’. இந்தத் திரப்படத்தில் நடிகை நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். படத்தை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் எடுத்துள்ளது. படத்தின் போஸ்டர்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், நேற்று இசை வெளியிட்டு விழா, தாம்பரம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் வந்திருந்தனர். ரசிகர்கள் அமர்வதற்கான அரங்கத்தில் உட்காருவதற்கு ரசிகர்களுக்கு ‘விஜய் மக்கள்’ இயக்கத்தின் மூலம் அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. நேற்று காலை முதலே ஏராளமான ரசிகர்கள் அரங்கத்திற்கு வந்துவிட்டனர். இதனால் பிற்பகலில் வந்த ரசிகர்களுக்கு இடமில்லை என காவல்துறையினர் கூறிவிட்டனர். ஆனால் ரசிகர்கள் எங்களிடம் இருப்பதே உண்மையான அனுமதிச் சீட்டு என்று கூறியுள்ளனர். அதற்குள் அங்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விட்டதால், அந்த இடமே விஜய் ரசிகர்களால் சூழப்பட்டது.
கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத காவல்துறையினர் திணறிப்போயினர். ஒருகட்டத்தில் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதாக தெரிகிறது. இதில் கூடியிருந்த விஜய் ரசிகர்கள் சிதறி ஓடியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் விஜய் காதுக்கு போக, அதன் எதிரொலியாகவே மேடையில் பேசிய விஜய், “என் படத்தை உடையுங்கள். பேனர்களை கிழியுங்கள். ஆனால் என் ரசிகன் மீது கை வைக்காதீர்கள்” எனப் பேசியுள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் அவர் மீது எந்தக் கோபமும் அடையவில்லை எனப்படுகிறது. இருந்தாலும், விழா ஏற்பட்டாளர்கள் மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தின் எதிரொலியாக விஜய் இசை வெளியிட்டு விழாவை விமர்சிக்கும் வகையில், #அய்யோஅம்மாஆடியோலான்ச் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக்கப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டேக்கில் விஜய் ரசிகர்களின் குமுறல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க நேற்று விழா மேடையில் பேசிய விஜய், “சுபஸ்ரீ விவகாரத்தில் ட்விட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும். சமூக வலைத்தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
அதனை நிறைவேற்றும் வகையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் மரணத்துக்கு நீதி கேட்கும் வகையில் #JusticeForSubashree என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் முறை பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த ஹேஷ்டேக் சென்னை அளவிலான ட்ரெண்ட்டிங்கில் முதல் இடத்திலும், இந்திய அளவில் 3 இடத்திலும் உள்ளது.