நயன்தாராவிற்காக கமல் பாடலை பியானோவில் வாசித்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவிற்காக கமல் பாடலை பியானோவில் வாசித்த விக்னேஷ் சிவன்
நயன்தாராவிற்காக கமல் பாடலை பியானோவில் வாசித்த விக்னேஷ் சிவன்

நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஜோடி இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமுக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன. 

நயன்தாராவையும் இயக்குநர் விக்னேஷ் சிவனையும் இணைத்து கடந்த சில வருடங்களாகவே செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அந்தச் செய்திகளுக்கு எல்லாம் நயன்தாராவோ அல்லது விக்னேஷ் சிவனோ வெளிப்படையாக எந்தவித கருத்துக்களையும் தெரிவித்ததில்லை. 

ஆனாலும் இந்த ஜோடி பொதுமேடைகளை சேர்ந்தே பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். விருது வழங்கும் விழாக்களுக்கு எல்லாம் நயன், விக்னேஷூடன்தான் வருகிறார். அதேபோல வெளிநாட்டு சுற்றுலாவிற்கு எல்லாம் கூட விக்னேஷுடன்தான் அவர் சென்று வருகிறார். அந்த விஷயங்கள் எல்லாம் வெளிப்படையாகவே நடக்கின்றன. அதில் எந்தவித ஒளிவுமறைவும் இருந்ததில்லை. அவ்வாறு இந்த ஜோடி இணைந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிரங்கமாகவே அவர்கள் பகிர்ந்து வருகிறார்கள். 

இந்நிலையில் இந்த ஜோடி அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல் பகுதிக்கு சென்று புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். அதற்கான படங்களை விக்னேஷ் சிவன் தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் நயன்தாரா ஒரு வண்ணமயமான பெண் ஓவியத்திற்கு அருகில் நிற்கிறார். அதனைக் கண்ட சில ரசிகர்கள், ‘உங்க உயிர் ஒவியம் முன்பு வனரந்த ஒவியம் தோற்றது’ எனக் கருத்திட்டு உள்ளனர். 

மேலும் விக்னேஷ் ஒரு வீடியோவையும் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர், ‘புன்னகை மன்னன்’ படத்தில் வரும் பின்னணி இசை கோர்வையை பியானோவில் இசைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவு கலிஃபோர்னியாவில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த அற்புதமான இசையை வழங்கியதற்காக இளையராஜாவிற்கு நன்றி என அவர் தெரிவித்துள்ளார். 

விக்னேஷ் சிவன் இயக்கி 2015 ஆண்டு வெளியான ‘நானும் ரெளடிதான்’ படத்தில் விஜய்சேதுபதிக்கு நயன், நாயகியாக நடித்திருந்தார். மாற்றுத்திறனாளி கதாப்பாத்திரத்தில் மிகச் சிறப்பாக அவர் தன் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஆகவே அப்படம் ரசிகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்று இந்த ஜோடி தங்களின் கோடை விடுமுறையை கொண்டாடி திரும்பியது. அதற்கான படங்களை அவர்கள் அப்போது வெளியிட்டபோது அவை வைரலாக பரவியது. இப்போது அதேபோன்றே இவர்கள் வெளியிட்டுள்ள படங்கள் வைரகாகி வருகின்றன.

இந்நிலையில் இந்த ஆண்டு சிவகார்த்திகேயனை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இயக்குநர் ராஜேஷ், சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் படத்தில் நயன்தாரா ஏற்கெனவே நயகியாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com