மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குள் உணவு பொருட்களை கொண்டு செல்ல அனுமதி!
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு, வெளியில் இருந்து உணவு பொருட்களை கொண்டு செல்ல தடையில்லை என்று மகாராஷ்ட்ரா அரசு கூறி யுள்ளது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவு பொருட்கள், குடிநீர், குளிர்பானம் போன்றவை அநியாய விலைக்கு விற்கப்படுகின்றன. இதற்காகவே பலர் இந்த திரையரங்குகளுக்கு செல்ல தயங்குகின்றனர். மேலும் வெளியில் இருந்து கொண்டுவரப்படும் தின்பண்டங்களையும் குடிநீர்களை யும் திரையரங்கு நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை.
இதைக் கண்டித்து மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நவநிர்மாண் சேனா கட்சி, போராட்டங்களை நடத்தி வருகிறது. மும்பை உயர்நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் அரசுக்கு கேள்வி எழுப்பி இருந்தது. இந்தநிலையில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் இந்த விவகாரம் நேற்று வெடித்தது.
இதற்கு பதில் அளித்த உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர், ரவீந்திர சவான், ’மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குள், பொதுமக்கள் உணவு பொருட்களை எடுத்து செல்ல இனி தடை இல்லை. அவர்கள் கொண்டு செல்லலாம். வெளியில் இருந்து உணவு பொருட்கள் கொண்டு வர அனுமதிக்காத திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல மற்ற மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கங்களிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.