நடிகர் அஜித்தின் அடுத்தப்படமான 'பிங்க்' தமிழ் ரீமெக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்தியில் வெளியாகி வெற்றிப்பெற்ற திரைப்படம் ‘பிங்க்’. மூன்று பெண்கள் மூன்று ஆண்களிடம் சிக்கி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும், அதற்கு பின் சட்டத்திற்கு முன்பு குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு ஆளாக்கப்படுவதுமாக இந்தக்கதை அமைந்திருக்கும். இந்தப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான வழக்கறிஞர் தோற்றத்தில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார்.
இந்தப் படத்தினை தமிழில் ஸ்ரீதேவி குடும்பத்தினர் ரீமேக் செய்ய உள்ளதாகவும், அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. பின்னர் உறுதிபடுத்தப்பட்டது. இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டு ‘சதுரங்கவேட்டை’ இயக்குநர் ஹெச். வினோத் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி, நடிகை நஸ்ரியா ஆகியோர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தில் இந்தி நடிகை வித்யாபாலன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழுக்காக பிரத்யேகமாக மாற்றம் செய்யப்பட்ட கதையில் அவருக்கான தேவை இருப்பதாகவும் அந்த கதாபாத்திரத்துக்கு வித்யாபாலனே சரியாக இருப்பார் என தயாரிப்பு நிறுவனம் விரும்பியதால் அவர் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படப்பிடிப்பின் போது தங்களின் கம்பெனிக்கு ஒரு படம் நடித்து தர வேண்டும் என நடிகை ஸ்ரீதேவி கேட்டுக் கொண்டதால் அஜித் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படம் மட்டுமின்றி ஸ்ரீதேவியின் தயாரிப்பு நிறுவனத்தின் மேலும் ஒரு படத்திலும் அஜித் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.