நான் பார்த்த முதல் பிளாக்பஸ்டர் ’மண்டாடி’.. படத்தை புகழ்ந்துபேசிய இயக்குநர் வெற்றிமாறன்!
தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘மண்டாடி’ 5 நாளில் 65 கோடியை கடந்த நிலையில், வார இறுதியில் 100 கோடி வசூலை எட்டும் படியாக முன்னேறுகிறது. இது சூரியின் முதல் 100 கோடி கிளப் படமாக மாறும் வாய்ப்பு அதிகம். உதவி இயக்குநர் காலத்திலிருந்து வசூல் நிலவரங்களை கவனித்த வெற்றிமாறன், தாம் பார்த்த முதல் பிளாக்பஸ்டர் இதுவே எனக் கூறி படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டியுள்ளார்.
மதிமாறன் இயக்கத்தில் சூரியின் நடிப்பில் வெளிவந்திருக்கும் மண்டாடி திரைப்படம், மீனவர்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கிடையே நடைபெறும் படகுப்போட்டியையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சூரியுடன் மகிமா, சுஹாஸ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். விறுவிறுப்பான திரைக்கதை, பின்னணி இசை, கேமரா ஒர்க் என அனைத்தும் ஒன்று சேர்ந்து அக்கடல் பயணத்திலிருந்து நம்மை வெளிவராதபடி கட்டிப்போடுகின்றன. ஒரு ரம்மியமான திரை அனுபவத்தை கொடுக்கும் மண்டாடி வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது.
கடந்த 10ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான மண்டாடி திரைப்படம், 5 நாளில் 65 கோடிக்கும் மேல் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. முதல் நாளில் வசூல் குறைவாக இருந்தாலும், அதற்குபிறகு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற மண்டாடி திரைப்படம் வசூலில் ஏறுமுகத்தையே பெற்றுவருகிறது. அதுமட்டுமில்லாமல் தியேட்டர்களுக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குடும்பங்களோடு பார்க்ககூடிய படம் என்பதால் வரும் வார இறுதியில் 100 கோடி வசூலை நெருங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 100 கோடி வசூலை கடந்தால் இது சூரியின் திரைவாழ்க்கையில் முதல் 100 கோடி வசூலை ஈட்டும் திரைப்படமாக மாறும்.
இந்தசூழலில் தான் மண்டாடி திரைப்படத்தை புகழ்ந்து இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டியுள்ளார்.
மண்டாடி படத்தை பாராட்டியிருக்கும் வெற்றிமாறன், “நான் உதவி இயக்குநராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே, எனது உதவி இயக்குநர்கள் படம் இயக்கும் காலம் வரை கிட்டத்தட்ட 15 முதல் 20 திரைப்படங்களின் வசூல் நிலவரங்களை மிக நெருக்கமாகக் கவனித்திருக்கிறேன்.
ஆனால், நான் பார்த்த முதல் 'பிளாக்பஸ்டர்' திரைப்படம் இதுதான். இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இத்திரைப்படத்தை நான் முதலில் பார்த்தபோது என்ன உணர்ந்தேனோ, அதே உணர்வுதான் இப்போதும் எனக்குள் இருக்கிறது.
படக்குழுவினரின் அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் இந்தத் திரைப்படத்தோடு தங்களை கனெக்ட் செய்து கொள்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கிலும் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது” என பேசியுள்ளார்.

