டிமானிட்டைசேஷனை கலாய்க்கிறாரா வெங்கட் பிரபு?: களைகட்டும் ‘பார்ட்டி’ டீசர்!
வெங்கட் பிரபு இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘பார்ட்டி’. இதில் பிரதமர் மோடி பணமதிப்பிழப்பை அறிவிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் டிமானிட்டைசேஷன் நடவடிக்கையை வெங்கட் பிரபு கலாய்க்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள அவர், “இது பணமதிப்பு நீக்கம் சம்பந்தமான படம் கிடையாது. பிரதமர் மோடி பணமதிப்பு நீக்கம் அறிவித்த நவம்பர் 8 ஆம் தேதிக்கும், கொடுக்கப்பட்ட கால அவகாசமான டிசம்பர் 31-க்கும் இடையே நடக்கும் கதை. குறிப்பாக டிசம்பர் 31 ஆம் தேதி பணத்தை மாற்ற என்ன மாதிரியான முயற்சி நடைபெறுகிறது என்பது பற்றிதான் சொல்லியிருக்கிறோம். இதில் டிமானிட்டைசேஷன் என்ற திட்டத்தையெல்லாம் கிண்டல் செய்யவில்லை. பிரதமரின் கதையை என் கதைக்குள் பொருத்திக் கொண்டேன்” என்று கூறினார்.
‘பார்ட்டி’ டீசரில் பிரதமர் மோடி, மித்ரோன்... என்று தனது உரையை துவங்குவது போலவும், டீசரின் முடிவில் பணம் செல்லாது என்று அறிவிப்பது போலவும் அமைந்துள்ளது. இந்தப் படத்தில், சத்யராஜ், நாசர், ஜெய், சிவா, ஜெயராம், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணன், சஞ்சிதா ஷெட்டி, கயல் சந்திரன், ஷாம், சுரேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. பிரேம்ஜி அமரன் இந்தப் படத்தில் நடிக்கவில்லை. ஷாக் ஆகாதீங்க..! படத்தின் மியூசிக் டைரக்டர் அவர்தான். இந்தப் படத்திற்காக 5 பாடல்களை இசையமைத்துள்ளார் பிரேம்ஜி.