‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம் 

‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம் 
‘உடன்பிறப்புகள் தின ஸ்பெஷல்’ - வெங்கட் பிரபு வெளியிட்ட புகைப்படம் 
விஜய் மற்றும் அஜித் உடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப் படத்தைப் பற்றிய நினைவுகளை இயக்குநர் வெங்கட் பிரபு பகிர்ந்து கொண்டுள்ளார்.
2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. அஜித்தின் திரை வாழ்க்கையில் இன்றுவரை தனி அடையாளத்தை அவருக்கு ஏற்படுத்தித் தந்துள்ள திரைப்படம் இது. இந்தப் படம் வெளியாகிப் பல ஆண்டுகள் கடந்து விட்டாலும் சமூக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பானதையொட்டி ட்விட்டரில் வைரலானது. அதனையடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டவர்கள் தங்களின் நினைவுகளைப் பகிரத் தொடங்கினர். 
இந்நிலையில், இப்போது மீண்டும் ‘மங்காத்தா’ படப் படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான நினைவை வெங்கட் பிரபு ஒரு புகைப்படம் மூலம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது அஜித், அப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் படப்பிடிப்பு தளத்திலேயே பிரியாணி சமைத்து விருந்து வைத்தார். அத்துடன் அவரே அங்குப் பணியாற்றிய அனைவருக்கும் தன் கையால் பரிமாறி உபசரித்தார். அந்தத் தருணத்தில் அருகிலேயே விஜய்யின் படப்புப்பு தற்செயலாக நடந்துள்ளது. அதனை அறிந்த வெங்கட் பிரபு, விஜய்க்கு அழைப்புக் கொடுத்துள்ளார். அதையேற்று விஜய் விருந்தில் கலந்து கொண்டார். அப்போது விஜய்யும் அஜித்தும் சேர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டுள்ளனர்.
விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரது ரசிகர்களுக்கு உள்ளாக ஒரு போட்டி நிலவி வரும் காலகட்டத்தில் இந்தப்புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இருவரும் மிக அன்பான மனநிலையில் அந்த விருந்தில் பங்கேற்றுள்ளனர். அதனைத்தான் இப்போது வெங்கட் பிரபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் இன்று உலகம் முழுவதும் Siblings Day கொண்டாடப்பட்டு வருகிறது.  அதாவது ஏப்ரல் 10 உடன்பிறப்புக்கள் தினம். அதனையொட்டியே வெங்கட் பிரபு இதனைப் பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், “இனிய உடன்பிறப்புகளின் தினம்.  அன்பைப் பரப்புங்கள் !! வெறுப்பை நிறுத்துங்கள் ” என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு ஏற்கெனவே விஜய் மற்றும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க விரும்புவதாகத் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருந்தார். அப்படி இருவரும் ஒன்றாக நடிக்க நேரிட்டால் அதற்கான கதாபாத்திரங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அவர் தீர்மானித்து வைத்திருப்பதாகக் கூறியிருந்தார். 
அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே சமூக வலைத்தளங்களில் கடுமையான போட்டி இருந்து வந்தாலும் விஜய், அஜித் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஒருவர் மற்றொருவர் வீட்டில் நடக்கும் விஷேசங்களில் இருவரும் தவறாமல் கலந்து கொள்கின்றனர். மேலும் ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டின் போதுகூட ‘நண்பர் அஜித் போல்  கோட் ஷூட் போட்டு வந்துள்ளேன்’ என்று விஜய் பேசியிருந்தது அப்போது வைரலாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com