EXCLUSIVE | கேப்டன் மில்லர் படம் ‘பட்டத்து யானை’ நாவலிலிருந்து திருடப்பட்டதா? வேல ராமமூர்த்தி பதில்!

“கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது நாவலான பட்டத்து யானையை திருடி எடுக்கப்பட்டுள்ளது” - எழுத்தாளர் வேலராமமூர்த்தி
கேப்டன் மில்லர் - வேல ராமமூர்த்தி
கேப்டன் மில்லர் - வேல ராமமூர்த்திபுதிய தலைமுறை

கேப்டன் மில்லர் படத்தின் கதை எனது நாவலான பட்டத்து யானையை திருடி எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிட உள்ளேன். இயக்குனர் பாக்யராஜ் இதற்கான நல்ல தீர்வை தருவார் என எதிர்ப்பார்க்கிறேன்” என எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு வெளியாகி உள்ளது. பொங்கலையொட்டி வெளியான இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஓரளவு வரவேற்பையே பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் கதை தனது நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி.

வேல ராமமூர்த்தி அவர் எழுதிய குற்ற பரம்பரை, குருதி ஆட்டம், அரியநாச்சி உள்ளிட்ட பல நாவல்களுக்காக பலராலும் அறியப்படுபவர். சினிமாவிலும் மதயானை கூட்டம், கிடாரி, சேதுபதி, அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் என்ற ப்ரைம் டைம் டிவி தொடரிலும் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

இவர் எழுதிய ‘பட்டத்து யானை’ என்ற நாவல் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தார் மூலம் புத்தகமாக வெளியாகியிருந்தது. தற்போது இந்த பட்டத்து யானையின் கதையை எடுத்துதான் கேப்டன் மில்லர் படத்தை எடுத்திருப்பதாக வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நடிகரும், எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி புதியதலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

”கேப்டன் மில்லர் திரைப்படம் நான் எழுதிய பட்டத்து யானை நாவலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நியாயம் கிடைக்க வேண்டும். தமிழ் சினிமாவில் நேர்மையே இல்லை. பட்டத்து யானை நாவலை தழுவி எடுத்த கேப்டன் மில்லர் படம் குறித்து திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் முறையிடப்போகிறேன்.

இதற்கு இயக்குனர் பாக்யராஜ் நியாயம் வழங்குவார் என எதிர்ப்பார்க்கிறேன். பட்டத்து யானை நாவலில் உள்ள ரணசிங்கம் என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கையைதான் கேப்டன் மில்லர் படமாக எடுத்துள்ளனர். என் நாவலின் பல சுவாரஸ்ய சம்பவங்களையே படமாக்கி உள்ளனர். ஏற்கனவே இக்கதையை நான் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.

படைப்பு திருடப்பட்டதாக நான் முதலில் பிரச்சனையை எழுப்பவில்லை. என் வாசகர்கள் கூறிதான் இந்த கதை திருட்டு புகார் என் கவனத்திற்கே வந்தது. கடந்த 10 - 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமாவில் பயணிக்கும் என்னிடம் இதை சொல்லிவிட்டு செய்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். இதுபோன்று என் ஏராளமான எழுத்துக்களை திருடி படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை. மட்டுமன்றி பணத்தையோ பொருளையோ கருதி பேசவில்லை. நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு. ஒரு நாவலை மண்வாசனையோடு எழுதுவது கடினம். ஆனால் அதனை எளிதாக சொல்லாமல் படமாக்கிவிடுவார்கள்.

நடிகர் தனுஷ் என்னை அப்பா என்றுதான் அழைப்பார். எனக்கு மகன் மாதிரி அவர். படத்தின் தயாரிப்பாளர் தியாகராஜனும் சினிமாவில் தரம் உட்பட அனைத்திலும் உயர்ந்த நபர். இவர்கள் இருவருக்குமே நாவலிலிருந்து கதை திருடப்பட்டது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போய் கதை சொல்பவர்கள்தான் இந்த வேலையை செய்கின்றனர். இப்படித்தான் கதை சொல்கிறவர்கள் மற்றவர்களுடையதை தங்களுடைய சொந்த கதையென அடித்துவிடுகிறார்கள்...

சினிமா டிஸ்கஷனிலேயே இதுதான் நடக்கிறது. என் நாவல் உலகம் முழுக்க பலராலும் வாசிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்கக்கூடிய அதை, இப்படி படமாக எடுப்பதுகூட என் பிரச்னை இல்ல. நான் கேட்பதெல்லாம், என் கதையை எடுக்கும்போது, என்னிடம் அந்தத் தகவலை சொல்லுங்கள். என் வாழ்நாளில் நான் பார்க்காத பெயரா, புகழா, பணமா, செல்வமா? நான் என்ன உங்களிடம் பணமா கேட்கப்போகிறேன்...? எனக்கு தேவையெல்லாம் படைப்புக்கான நியாயமும் நேர்மையும் மட்டும்தான்! அது வேணும்ல.... அது இங்கே இல்லை.

ஜெயகாந்தனின் படைப்பின் பெயரை, அவரிடம் கேட்காமலயே ஒருமுறை சினிமாவுக்காக எடுத்துக்கொண்டார்கள். அப்போது அதுபற்றி அவரிடம் சிலர் கேட்டபோது, ‘இல்லாதவன் எடுத்துக்குறான்’ என்றாராம் அவர். அப்படித்தான் நானும் இருந்தேன். ஆனால் இப்படத்தில் என் நாவலிலிருந்த களம் - வருடம் - ஊர் மற்றும் பெயரை மாற்றி அப்படியே பயன்படுத்தியுள்ளனர். இது மிகப்பெரிய தவறு. இதற்கு நியாயம் வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com