ஒருவரின் துயரத்தை ஏன் இப்படி காட்ட வேண்டும் என்று புரியவில்லை -பத்திரிகையாளர்களை சாடிய வருண்!
கடந்த 2002-ம் ஆண்டு இசை வீடியோ ஆல்பமான ‘Kaanta Laga’ மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர், ஷெஃபாலி. தொடர்ந்து ‘முஜ்சே ஷாதி கரோகி’ என்ற படத்தில் சல்மான் கான் உடன் நடித்தார். 2019-ல் ‘பேபி கம் நா’ என்ற வெப் சீரிஸில் நடித்தார். நடன நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். தொடர்ந்து, இந்தி மொழியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 13 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார் ஷெஃப்பாலி.
இந்நிலையில், 42 வயதான அவர் நேற்று இரவு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவரது உடல் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வருவது, இறுதி சடங்குகள் உள்ளிட்ட அனைத்தையுமே மீடியாவில் காட்சிப்படுத்தினார்கள்.
இந்நிலையில், இதுகுறித்து முன்னணி நடிகரான வருண் தவான் பதிவு ஒன்றினை கடும் கோபத்தோடு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து நடிகர் வருண் தவான் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மற்றொரு ஆன்மாவின் மரணத்தை முறையற்ற வகையில் மீடியாவில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஒருவரின் துயரத்தை நீங்கள் ஏன் இப்படி காட்ட வேண்டும் என்று புரியவில்லை. அனைவருமே இதைப் பார்த்து மிகவும் சங்கடமாக உணர்கிறார்கள். இது யாருக்கு எப்படி பயனளிக்கிறது. மீடியாவில் உள்ள எனது நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள், ஒருவருடைய இறுதிப் பயணத்தை காட்டும் விதம் இதுவல்ல” என்று தெரிவித்துள்ளார்.