வாரிசு விமர்சனம்: சச்சின், வசீகரா காலத்து துள்ளலுடன் விஜய்...பொங்கலை தித்திக்க வைக்கிறாரா?

வாரிசு விமர்சனம்: சச்சின், வசீகரா காலத்து துள்ளலுடன் விஜய்...பொங்கலை தித்திக்க வைக்கிறாரா?
வாரிசு விமர்சனம்: சச்சின், வசீகரா காலத்து துள்ளலுடன் விஜய்...பொங்கலை தித்திக்க வைக்கிறாரா?

தன் பிரமாண்ட சாம்ராஜ்ஜியத்தைத் தனக்குப் பின்னர் யார் ஆள்வது என்கிற அப்பாவின் கேள்விக்கு, மகன் சொல்லும் பதிலே இந்த வாரிசு.

இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் ராஜேந்திரன் (சரத்குமார்). அவருக்கு மூன்று மகன்கள். முதலிரண்டு மகன்கள் ஜெய் (ஸ்ரீகாந்த்), அஜய் (ஷ்யாம்) அப்பாவின் சொற்படி கேட்டு குடும்ப நிர்வாகத்தைப் பார்த்துக்கொள்ள, மூன்றாவது மகன் விஜயோ (விஜயே தான்) சுயம்புவாக முன்னேற வீட்டை விட்டு வெளியேறுகிறார்.

ஆனால், காலம் மூன்றாவது மகனை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வருகிறது. இதற்கிடையே ராஜேந்திரனின் நிர்வாகத்தை நிர்மூலமாக்கி, தன் சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த வேண்டும் என்கிற முனைப்பில் தீராப் பகையுடன் சுற்றி வருகிறார் ஜெயபிரகாஷ் (பிரகாஷ் ராஜ்). குடும்பப் பிரச்னைகளையும், நிர்வாக சீர்கேடுகளையும், விஜய் ஒன் மேன் ஆர்மியாக சரி செய்து, எப்படி ஒரு ரியல் வாரிசாக உருமாறுகிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

எழுதி எழுதித் தேய்த்த வரிகள் தான் என்றாலும், மீண்டும் மீண்டும் அதைச் சொல்ல வைத்துவிடுகிறார் விஜய். திரையில் தன்னை அப்படியே காட்ட கால இயந்திரம் பயன்படுத்துகிறாரோ என்னும் அளவுக்கு இளமையாக இருக்கிறார். சச்சின், வசீகரா காலத்து துள்ளல், எள்ளல் எல்லாம் இந்தப் படத்தில் அவ்வளவு யதார்த்தமாய் விஜய்க்கு அமைந்திருக்கிறது.

யார் என்ன சொன்னாலும், எமோஷனல் காட்சியாகவே இருந்தாலும் நக்கல் அடிப்பதென, படம் முழுக்கவே விஜயின் மேனரிசம் அருமை.

ராஜேந்திரனாக சரத்குமார் எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஜெயசுதாவுக்கும் நல்லதொரு வேடம். யோகிபாவும், விஜயும் பேசிக்கொள்ளும் காட்சிகளில் ஹூமர் பக்காவாக செட்டாகியிருக்கிறது. பிரகாஷ்ராஜ் வழக்கம் போல அசால்ட்டாக தன் வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார். பிரபு, கணேஷ் வெங்கட்ராம், ஷ்யாம். ஸ்ரீகாந்த் , சங்கீதா, சம்யுக்தா என படத்தில் ஒரு டஜன் நடிகர்கள். எல்லோருமே வந்துபோகிறார்கள். பாடல்களுக்காவே மட்டுமே வரும் சம்பிரதாய நாயகியாக ராஷ்மிகா மந்தனா. இன்னும் பல் கிளிப், அழுந்தப் படிந்த தலைமுடி போன்றவற்றை வைத்து காமெடி எழுதும் வறட்சி தொடர்வது வேதனை அளிக்கிறது.

காமெடி இருக்கி, ஸ்டண்ட் இருக்கி, எமோஷனல் இருக்கி என தொடர்ச்சியாக படக்குழுவினர் சொல்லிக் கொண்டிருந்ததைப் போலவே படத்தில் இவை எல்லாமே இருக்கின்றன என்பதை உறுதி செய்கிறார் வம்சி. விவேக்கின் எமோஷல் வசனங்களும் படத்துக்குப் பக்கபலமாக இருக்கின்றன. திலீப் சுப்பராயன், பீட்டர் ஹெய்ன் இணையின் கைவண்ணத்தில் கோஸ்டல் ஏரியா, மைனிங் ஏரியா, வீடு என எல்லா இடங்களிலும் சண்டைக் காட்சிகள் பக்கா மாஸ் சொல்ல வைக்கின்றன. தமனின் இசையில் பாடல்களும் அடுத்தடுத்து வந்தாலும், அவை நம்மை சோதிக்காத வண்ணம் கலர்ஃபுல்லாய் இருக்கின்றன. ரஞ்சிதமே பாடலில் கிட்டத்தட்ட ஒரு நிமிடத்துக்கு மேல் வரும் சிங்கிள் ஷாட் நடனம் ஜானி, விஜயின் உழைப்புக்கு கிடைத்த ஹிட்டு.

படத்தின் மிகப்பெரிய போதாமை படத்தின் திரைக்கதையில் தொடங்குகிறது. குடும்ப பாசம், பனிப்போர் தொடர்பான கதையென்றாலும், அதில் எந்தவித உப்புச்சப்பில்லாமல் இன்னமும் எதற்கென தெரியாமல் மோதிக்கொள்ளும் அண்ணன் தம்பி பஞ்சாயத்து போரடிக்க வைக்கிறது. எதிர்மறை கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்படவில்லை. விஜய் போன்ற ஸ்டாருடன் போட்டி போடும் அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு சுமாரான சண்டைக்குக்கூட லாய்க்கில்லாத அளவுக்கு மேம்போக்காக அந்தக் கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருப்பதால், எப்படியும் எந்தப் பாதிப்பும் வந்துவிடாது நம் அனைவருக்குமே தெரிந்துவிடுகிறது.

கூடுதலாக இது போன்ற பிஸ்னஸ் சம்பந்தப்பட்ட களத்தில் ஹீரோவுக்கு வரும் சவால்களை இன்னும் மிஸ்டர் பாரத் காலத்தில் இருந்தே யோசித்துக் கொண்டிருப்பது படு போர். கதையளவில் புதிதாக எதுவும் வழங்காத மிக மிக வழக்கமான ஒரு சினிமாவாக மிஞ்சுகிறது.

விஜய் என்ற ஒற்றை மனிதரின் உழைப்பு மட்டுமே வாரிசுப் பொங்கலை தித்திப்பாக சுவைக்க வைக்குமா என்றால் அது சந்தேகமே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com