அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ஹூமா குரோஷி நடிக்க இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.
பாலிவுட் நடிகையான ஹூமா குரோஷி, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படம் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிரம்பிய இந்தப் படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதற்குப் பின்னால் ஹூமா குரோஷிக்கு வேறு பட வாய்ப்பு தமிழில் கிடைக்கவில்லை. இப்போது இவர் கோலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இது சம்பந்தமாக வெளியான வதந்திகள் இப்போது நம்பும்படியாக உள்ளது. அஜித்தின் ‘வலிமை’ படத்தில் ஹூமா ஒப்பந்தமாகி இருப்பதாக தெரிகிறது. இதில் இவர்தான் நாயகியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கதாபாத்திரம் ஹூமாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாக தெரிகிறது. இருப்பினும், ‘வலிமை’ படக்குழுவிடமிருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஹூமா ‘வலிமை’யின் ஒரு பகுதியாக நடிக்க இருப்பதைப் பற்றிய வதந்திகள் ட்விட்டரில் வெளியாகி வரும்வேளையில், இவர் சென்னையில் ஒரு படப்பிடிப்பிற்காக தங்கி இருந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “umang police showவில் ஒரு அங்கமாக இருக்க விரும்பினேன். ஆனால் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருக்க வேண்டியிருந்தது” எனக் கூறியிருக்கிறார்.
இவர் குறிப்பிட்டு சொல்லும் ஷோ மும்பையில் ஒளிபரப்பாகும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். அதை விட்டுவிட்டுதான் அவர் சென்னைக்கு வந்துள்ளார். ஆகவே அது என்ன படப்படிப்பு? அஜித்தின் படமாக இருக்குமா? என பலரும் சந்தேகத்தை கிளப்பி வருகிறார்கள்.