தஞ்சை கோயில் குடமுழுக்கு தமிழுக்கு கிடைத்த முதல் வெற்றி: வைரமுத்து புகழாரம்
தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படுவது, ஆலய கருவறைக்குள் நுழையும் முயற்சியில் தமிழுக்கு கிடைத்த முதல் வெற்றி என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், எதிர்காலத்தில் கோயில்களில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் விருப்பம் என தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர், "ஆலய கருவறைக்குள் நுழையும் முயற்சியில் தமிழுக்கு முதல் வெற்றி. தமிழில் குடமுழுக்கு நடத்தப்படுவதில் ஒரு வரலாறு நிகழ்ந்திருக்கிறது.
வெற்றிக்கு போராடிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. மாறும் உலகத்தில் எல்லாம் மாறிக் கொண்டேதான் இருக்கின்றன. தமிழில் குடமுழுக்கு என்ற கருத்து யாருக்கும் எதிரானது அல்ல.
தமிழகத்தில் பெரும்பாலானோர் இறைநம்பிக்கை கொண்டவர்கள். இங்கு ஆத்திகர், நாத்திகர் இருவருக்குமே தாய்மொழி தமிழ்தானே? கடவுளுக்கு சமஸ்கிருதம் புரியுமென்றால், தமிழ் புரியாதா? ராஜராஜன் சிவபக்தன் என்றால், நாங்கள் அவருக்கு பக்தர்கள். ராஜராஜனின் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும்.
பண்டைய காலத்தில் கோயில்கள்தான் சமூகம். எதிர்காலத்தில் தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். புரியும் மொழிதான், கடவுளுக்கும், பக்தனுக்கும் பிடித்த மொழி" என தெரிவித்துள்ளார்.