''நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை": சூர்யாவுக்கு வைரமுத்து பாராட்டு!
சுமத்தப்பட்ட பழியின் மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று என்று கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
நடிகை மீராமிதுன் அண்மை காலமாக முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதிலும் சூர்யா, விஜய், த்ரிஷா போன்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இழிவாக பேசி வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு விஜய், சூர்யா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜாவும் மீராமிதுனுக்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருந்தார். இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், ““எனது தம்பி தங்கைகளின் நேரமும், சக்தியும் ஆக்கப்பூர்வமான செயல்களுக்குப் பயன்பட வேண்டும் என்பதே என் விருப்பம். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிற்கு என் உளப்பூர்வமான நன்றிகள்” எனத் தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்னதாக சிலநாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா பதிவிட்டிருந்த ட்விட்டர் பதிவில், “தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற.”எனவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “சுமத்தப்பட்ட பழியின்மீது சூர்யாவின் அணுகுமுறை நன்று. பக்குவப்பட்டவர்கள் பதற்றமுறுவதில்லை; பாராட்டுகிறேன். நதியோடு போகும் நுரையோடு கரை கைகலப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.