மிஷ்கின் படத்தில் வடிவேலு: சிம்பு உடன் மீண்டும் இணைகிறார் ?
மிஷ்கின் இயக்க உள்ள திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷாலை வைத்து இயக்குநர் மிஷ்கின் இயக்கிய திரைப்படம் ‘துப்பறிவாளன்’. த்ரிஷல் மற்றும் ஆக்ஷன் வகையில் உருவான இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. அதனையடுத்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இது தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகக் கூறப்பட்டது. ஆகவே இப்படத்தை இயக்குவதில் இருந்து மிஷ்கின் வெளியேறினார்.
அதன் பிறகு அவர் நடிகர் சிம்புவை சந்தித்து ஒரு கதையைக் கூறியிருந்தார். இக்கதையைக் கேட்டு சிம்பு ஈர்க்கப்பட்டார். இப்போது சிம்பு ‘மாநாடு’ படப்பிடிப்பில் உள்ளார். அதன்பின் மிஷ்கின் படத்தில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மிஷ்கினின் படம் குறித்த ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சிம்புவை வைத்து இவர் இயக்க உள்ள படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இயக்குநர் சிம்புதேவனின் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கலால் அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர், தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில் படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால் ரூ.10 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும், அந்த இழப்பில் செட் செலவும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அவரை அழைத்தபோது வடிவேலு வரவில்லை. ஆகவே அதன்பின்னர் வடிவேலு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. இதனிடையே இப்போது, சிம்புவுடனான படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க மிஷ்கின் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், இது சம்பந்தமாக படக்குழு எந்தவித அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. முன்னதாக, ஹரி இயக்கிய‘கோவில்’ படத்தில் சிம்புவுடன் வடிவேலு நடித்திருந்தார். இவர் கடைசியாக 2017 ஆம் ஆண்டு வெளியான விஜயின் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.