பாஜக அல்ல, தனிக்கட்சிதான்: அரசியலில் இன்னொரு ஹீரோ!
எந்த கட்சியிலும் சேர மாட்டேன், தனிக்கட்சிதான் தொடங்குவேன் என்று கன்னட நடிகர் உபேந்திரா அறிவித்துள்ளார்.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக செய்திகள் வரும் நிலையில் கன்னட நடிகர் உபேந்திராவும் அரசியலில் இறங்க போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாயின. அவர் பாஜகவில் சேரப்போவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் செய்தியாளர்களை நேற்று சந்தித்த அவர், ’மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் மக்களுக்காக வேலை செய்ய தயாராக இல்லை. மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளேன். அரசியலில் வெற்றி பெற வேண்டும் என்றால் சாதி, பணம் தேவை. அது இல்லாமல் புதிய அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். நான் எந்த கட்சியிலும் சேரமாட்டேன். அதில் விருப்பம் இல்லை. அதனால் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளேன். தனிக்கட்சி தொடங்குவது குறித்து மக்களிடம் கருத்து கேட்க உள்ளேன். கேட்டபின்பு கட்சியின் பெயர், சின்னம் பற்றி தெரிவிப்பேன்’ என்றார்.