தமிழ், தெலுங்கில் நேரடியாக தயாராகவுள்ள சிவகார்த்திகேயன் படம்... விரைவில் படப்பிடிப்பு?
சிவகார்த்திகேயன் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'டாக்டர்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதையடுத்து தற்போது 'டான்' என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாகும் புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்று சில வாரங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
அந்த திரைப்படத்தை ஜதி ரத்னாலு படத்தை இயக்கிய அனுதீப் இயக்குகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்தப் படம் எப்போது தொடங்கும் என்ற தகவல் அப்போது வெளியாகவில்லை.
இந்த நிலையில் 2021a-ஆம் ஆண்டு இறுதியில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் - தெலுங்கு மொழிகளில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்த தமிழ் படங்கள், தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. முதன்முறையாக தமிழ் - தெலுங்கு மொழிகளில் அவர் நடிக்கும் படம் நேரடியாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.