த்ரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி ஸ்டாலின்? - ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?

த்ரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி ஸ்டாலின்? - ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?
த்ரில்லர் கதையில் சாதித்தாரா உதயநிதி ஸ்டாலின்? -  ‘கண்ணை நம்பாதே’ எப்படி இருக்கு?

ஓர் இரவில் நடக்கும் இரண்டு மரணங்கள், அதற்கு காரணம் யார் என்பதே ‘கண்ணை நம்பாதே’ படத்தின் ஒன்லைன்.

அருண் (உதயநிதி), சோமு (பிரசன்னா) இருவரும் அறைத்தோழர்கள். எதிர்பாராத ஓர் இரவில் சவிதா (பூமிகா) கார் ஓட்ட முடியாமல் சிரமப்பட அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று இறக்கிவிடுகிறார் அருண். மழை இரவு என்பதால் அருணையே காரை எடுத்துச் சென்று காலையில் திருப்பித் தருமாறு சவிதா கூற, மறுநாள் அதே காரில் ஒரு பிணம் இருக்கிறது. இதைத் தொடர்ந்து நிகழும் ஒரு விபத்து; அதில் ஒருவர் மரணமடைகிறார். காரில் இருக்கும் பிணம், விபத்தில் இறந்தவர், இந்த இரண்டு பிணங்களையும் மறைக்க அருணும், சோமுவும் செய்வது என்ன? இவர்கள் இறப்பிற்கு காரணம் என்ன? இந்தப் பிரச்சனையில் இருந்து இவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் ஓரளவு சொல்லிக் கொள்ளும்படி இருப்பது, பரபரப்பாக நகரும் படத்தின் முதல் பாதி. மற்றொன்று த்ரில் ஃபீலுக்கு கைக்கொடுக்கும் சித்துகுமாரின் பின்னணி இசை. ஜலந்தரின் ஒளிப்பதிவும் ஒரு த்ரில்லர் படத்துக்கு தகுந்த உணர்வைக் கொடுத்திருக்கிறது. இவை தவிர படம் மொத்தமுமே மிக பலவீனமாக இருக்கிறது. 

ஒரு த்ரில்லர் படத்தின் சுவாரஸ்யமே, whodunnit எனக் கடைசி வரை நம்மைக் கட்டிப் போடும் படத்தின் திரைக்கதை தான். வழக்கமாக படத்தின் துவக்கத்திலேயே கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்திவிட்டு, அவர்களில் யார் குற்றவாளி என்று கதை நகரும். கூடவே, முக்கியமான விஷயங்களை எப்படி மறைத்து பின்னால் அதை எவ்வளவு சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறார்கள் என்பதும் பார்வையாளர்களின் ஆர்வத்தை அதிகப்படுத்தும். இவை இரண்டிலுமே இந்தப் படம் தோற்கிறது.

படம் முழுக்க தடுக்கி விழுந்தால், ஒரு கோ இன்சிடென்ட் நிறைந்திருக்கிறது. ஹீரோவும் ஹீரோயினும் முதல் முதலாக பார்க்கில் சந்தித்துக் கொள்கிறார்கள். அடுத்த காட்சியில் வாடகைக்கு தேடிச் செல்லும் வீடு, ஹீரோயின் வீடாக இருக்கிறது. எதேச்சையாக ஒரு கதாபாத்திரம் கார் ஓட்டி செல்ல, ரோட்டின் ஓரத்தில் ஒரு ரேப் அட்டம்ப்ட் நடக்கிறது.

கதாநாயகன் சம்பத்தப்பட்ட கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் கதாநாயகனுக்கு தெரிந்த போலீஸாகவே இருப்பார். இந்தப் படத்தின் ஆரம்பத்தில் ஒரு கதாபாத்திரம் எலி மருந்தை உணவுப் பொருளில் கலந்து ஒரு மரணத்துக்கு காரணம் ஆகும். அந்த எலிமருந்து கவரை எல்லோர் கண்ணிலும் படும்படி போட்டிருக்கும் அந்த கதாபாத்திரம். இவ்வளவும் எதேச்சையாக நடக்கும் விஷயம் என பார்க்கும் நம்மால் நம்ப முடியவில்லை. நடிகர்களின் நடிப்பை பொறுத்தவரையில் உதயநிதி ரொம்பவும் சுமாரான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஆனால், ஹீரோவுக்கான அந்த இடத்தை கதாபாத்திர அழுத்தத்தாலும், தனது நடிப்பாலும் சுலபமாக எடுத்துக் கொள்கிறார் பிரசன்னா. படத்தின் முதன்மைப் பாத்திரமே அவர் தான் என்பது போல, ஒவ்வொரு முடிவையும் அவர் தான் எடுக்கிறார். அவர் சொல்லும் அனைத்தையும் செய்யும் துணை பாத்திரமாக ஒதுக்கப்படுகிறார் உதயநிதி. இவர், ஸ்ரீகாந்த், மாரிமுத்து, பூமிகா, ஆத்மிகா என அனைவரும் தங்களது வழக்கமான ஒரு நடிப்பை இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறார்கள்.

உதயநிதியின் நண்பராக வரும் சதீஷ் படத்தின் முக்கிய பிரச்சனை துவங்கியதும் காணாமல் போகிறார். கொலை சம்பந்தப்பட்ட எவிடன்ஸை சேகரிக்கும் ஒரு கதாபாத்திரம் இவர்கள் இருவரும் படம் துவங்கி பாதியிலே காணாமல் போகிறார்கள். பாதியிலேயே நீக்கப்படும் என்றால் எதற்காக இந்த பாத்திரங்கள் என்ற கேள்வியும் எழுகிறது. படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிற்கு மருத்துவர் ஆக வேண்டும் என்பதும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதும் நோக்கம். ஆனால், அந்தக் கதாபாத்திரம் ஏன் அம்மாவின் அன்புக்காக ஏங்குகிறது என்பதும் புரியவில்லை.

படத்தின் துவக்கத்தில் இரண்டு சம்பவங்கள் காட்டப்படுகிறது. ஒன்று ஒரு ஆதரவற்றோர் இல்லம் சம்பந்தப்பட்டது, இன்னொன்று சென்ராயன் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. இந்த இரண்டும் சொல்லப்படும் கதைக்குள் இணைக்கப்படும் இடம், பார்வையாளர்களுக்கு எந்த சர்ப்ரைஸும் தராமல் வெறும் Connecting the dots என்ற அளவிலேயே நின்றுவிடுகிறது. படத்தின் இறுதியில் இயக்குநர் மாறனின் முந்தைய படமான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இணைக்க முயன்றிருக்கிறார். ஆனால் அதன் மூலம் படத்திற்கு எந்த சிறப்பும் சேரவில்லை. படத்தில் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய திருப்பம் பல படங்களில் அடித்துத் துவைத்தது. அதன் பிறகு நடப்பதாக சொல்லப்படும் க்ரைமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

மொத்தத்தில் இந்தப் படம் மிக சுமாரான ஒரு த்ரில்லர் படமாக வந்திருக்கிறது. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ உங்களுக்குப் பிடிக்கும் என்றால், இந்தப் படமும் சுவாரஸ்யம் தர வாய்ப்பிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com