100 நாள் சுற்றுப்பயணத்துக்கு இடையே மீண்டும் படப்பிடிப்பில் உதயநிதி!
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 100 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த திமுக இளைஞரணிச் செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், மகிழ் திருமேனி இயக்கும் பட ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். தேர்தல் பிரசாரம், சினிமா ஷூட்டிங் இரண்டுக்கும் திட்டமிட்டு நேரம் ஒதுக்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு தமிழகம், அசாம், பாண்டிச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக களச்செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் கடந்த மாதம் தனது தாத்தாவும், மறைந்த முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த ஊரான திருக்குவளையிலிருந்து தனது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வந்தார். அப்போது, அவர் கைது செய்யப்பட்டதும் பெரும் பரபரப்பானது.
இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கும் படத்தின் ஷூட்டிங்கில் உதயநிதி இணைந்துள்ளார். கடந்த மாதம் 6 ஆம் தேதி மகிழ் திருமேனி, உதயநிதி இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், நேற்று முன்தினம் முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது.
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ்தான் இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்க, 'பிசாசு' படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரேலி இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் தனெக்கென தனி பாணியை கடைப்பிடித்து வெற்றி பெற்றவர் இயக்குநர் மகிழ் திருமேனி. இயக்குநர் செல்வராகவன், கெளதம் மேனன் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தத இவரது கதைகளும் கதைக்களமும் வித்தியாசமானவைதான். இந்நிலையில், உதயநிதியுடன் இவர் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. தேர்தல் தொடங்குமுன் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதனால்தான், உதயநிதி அவசர அவசரமாக இப்படத்தை முடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளார்.