இடிக்கப்படும் உதயம் தியேட்டர்.. இறுதி நொடிகள்.. கண்கலங்கும் ரசிகர்கள்!
சென்னை அசோக் பில்லர் என்றதுமே பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது உதயம் திரையரங்கம்தான். குறிப்பாக விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் சொல்லவே வேண்டாம். ரசிகர்கள் உதயம் திரையரங்கம் முன்பு பெரிய பெரிய கட் அவுட் வைத்து... கொண்டாடி தீர்த்து விடுவார்கள்.
சென்னையை சுற்றிலும், நவீன மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், மால்கள் போன்றவை ஏராளமாக வந்து விட்டாலும், உதயம் திரையரங்கிற்கு வந்து படம் பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வசதியானவர் முதல் அடித்தட்டு மக்கள் வரை எவ்வித பாகுபாடு இன்றி, இத்திரையரங்கில் அனுமதிப்பது உண்டு. அதை குறிக்கும் விதமாதான் அஜித் படத்தில் "உதயம் தியேட்டருல என் இதயத்த தொலைச்சேன்" என்ற பாடல் அமைக்கப்பட்டது.
நெல்லை அண்ணாச்சிகள் தொடங்கிய பல கடைகள்தான் இன்று சென்னை முழுக்க உயர்ந்து நிற்கிறது. அந்த வகையில் உதயத்தூரில் இருந்து வந்த பரமசிவம் பிள்ளை மற்றும் அவரின் 5 சகோதரர்கள் சேர்ந்து 1983ல் அசோக் பில்லர் சந்திப்பு அருகே.. நிலம் வாங்கி தியேட்டர் கட்டினார்கள். முதலில் ஒரு ஸ்கிரீன் வைத்து கட்டப்பட்ட தியேட்டருக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்த போது.. தங்களின் உதயத்தூர் நினைவாக.. உதயம் தியேட்டர் என்று பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் வளர வளர தியேட்டரில் கூடுதல் ஸ்கிரீன் போடப்பட்டு உதயம், சந்திரன், சூரியன், மினி உதயம் என்று வளர்ந்தது.
சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு வரை கூட சத்யம் , அபிராமிக்கு அடுத்தபடியாக பெரிய தியேட்டர் என்றால் உதயம் தான். கடந்த 15 ஆண்டுகளாக ‘இப்போது விற்கப்படுகிறது, நாளை விற்கப்படுகிறது’ என்று வதந்திகள் அவ்வப்போது கிளம்பினாலும், இந்த முறை அது உண்மையாகி இருக்கிறது.
பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்று, 1.3 ஏக்கர் பரப்பளவு கொண்ட உதயம் தியேட்டர் இடத்தை வாங்கியிருப்பதாகவும், விரைவில் அங்கு 25 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியிருந்தது. ஆனால் அதை ஒருபக்கம் சம்மந்தப்பட்டவர்கள் மறுப்பு தெரிவித்து வந்தவேளையில் தற்போது மூடப்பட்டு இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த செய்தி சென்னை சினிமா ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் உதயம் திரையரங்குடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.