ட்விட்டரில் மோதிக்கொண்ட கருணாகரன்- விஜய் ரசிகர்கள்!
ஒரு நடிகரின் ரசிகர்கள் போடும் பதிவை வைத்து தான் அந்த நடிகரின் தரத்தை சொல்ல முடியும் என ட்விட்டரில் சண்டையிடும் விஜய் ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார் நடிகர் கருணாகரன்.
சர்கார் ஆடியோ வெளியீட்டின் போது நடிகர் விஜயின் பேச்சு அரசியல் தொடர்பாக அமைந்தது. சர்காரின் மேடைப்பேச்சுக்கு பிறகு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் விஜய் குறித்த தங்களின் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் விஜயின் குட்டிக்கதையை மறைமுகமாக விமர்சனம் செய்த கருணாகரன், “குட்டி கதைகள் அரசியல் தலைவர்களுக்கு மட்டும்தானா? அறிவுரை கூறும் நடிகர்களின் நண்பன், நண்பிகள் அதை பின்பற்றுகிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும்” என கூறினார்.
விஜயை மறைமுகமாக சாடியதால் கொந்தளித்த அவரது ரசிகர்கள், ட்விட்டரில் கருணாகரனை வசைபாடத்தொடங்கினர். இந்நிலையில் நடிகர் கருணாகரன் ஒரு நடிகரின் ரசிகர்கள் போடும் பதிவை வைத்து தான் அந்த நடிகரின் தரத்தை சொல்ல முடியும் என்று ட்வீட் செய்தார். மீண்டும் கொந்தளித்த ரசிகர்கள் கருணாகரன் தமிழர் இல்லை என்று பதிவிட்டனர். அதற்கும் பதிலளித்த கருணாகரன் நான் தமிழ்நாடா என்பது போன்ற முட்டாள்தனமான கேள்விகளை கேட்காதீர்கள். சர்கார் என்பது தமிழ் மொழியா என்று நான் கேட்டேனா என்று பதிலளித்தார்.
ட்விட்டரில் வாதம் தொடர, அண்ணா நீங்கள் தமிழ்நாட்டை சுத்தப்படுத்துவதற்கு முன் உங்களது ரசிகர்களை சுத்தப்படுத்துங்கள் என நடிகர் விஜயை டேக் செய்து ட்விட் செய்தார். ரசிகர்களின் தொடர் கொந்தளிப்பால் அந்த ட்விட்டை நீக்கி, ட்விட்டர் போரை ஒரு முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் கருணாகரன்