கணக்கை முடக்குவதா? ட்விட்டருக்கு எதிராக இந்தி நடிகர் ஆவேசம்
ஆமிர்கான் நடித்துள்ள ’சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ படத்தை மோசமாக விமர்சனம் செய்ததாக இந்தி நடிகரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.
இந்தி பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் கமால் ஆர்.கான், ட்விட்டரில் அதிரடி கருத்துகளை வெளியிட்டு சர்ச்சையை கிளப்புபவர். கடந்த தீபாவளியின் போது, அஜய்தேவ்கன் நடித்த ’சிவாய்’ படத்தை மோசமான விமர்சித்து பதிவிட்டதால் இவரது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதையடுத்து ட்விட்டர் பக்கமே தலைகாட்ட மாட்டேன் என்றார். இந்நிலையில் அவர் கணக்கு மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கருத்துகளைப் பதிவு செய்துவந்தார்.
இந்நிலையில் ஆமிர்கான் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள இந்தி படமான, ’சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ படத்தை மோசமாக விமர்சித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது.
இதையடுத்து கோபம் அடைந்துள்ள கமால் ஆர்.கான், ‘நான் யாரையும் மிரட்டவில்லை. தவறாக நடந்து கொள்ளவில்லை. பிறகு ஏன் ட்விட்டர், என் கணக்கை முடக்கியுள்ளது என்று தெரியவில்லை. ஆறு மில்லியன் பாலோயர்கள் உள்ள எனது கணக்கை முடக்க ட்விட்டருக்கு அதிகாரமில்லை. ஆமிர்கான் மட்டுமே பயன்படுத்தினால் போதுமென்று ட்விட்டர் நினைக்கிறதா? ட்விட்டருக்கு எதிராக வழக்குத் தொடர்வேன்’ என்று கூறியுள்ளார்.