ஜோதிகா, பானுப்பிரியா, ஊர்வசி, சரண்யா உட்பட பலர் நடித்திருக்கும் படம், ‘மகளிர் மட்டும்’. பிரம்மா இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.
சூர்யாவின் அம்மா லட்சுமி சிவகுமார், ஜோதிகாவின் தாயார் சீமா, பிரம்மாவின் தாயார் பார்வதி கோமதி நாயகம் மற்றும் 2டி நிறுவன ராஜாவின் தாயார் சாந்தா கற்பூர சுந்தரபாண்டியன் இணைந்து வெளியிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியது:
பெண்கள் பணிபுரியும் போது, வீட்டிலிருக்கும் மற்ற பெண்கள் உறுதுணையாக இருப்பார்கள். எனது அம்மா, சூர்யாவின் அம்மா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சூர்யா, கார்த்தி ஆகியோரைத் தொடர்ந்து, தற்போது எனக்கும் தினமும் மதிய சாப்பாடு அனுப்புகிறார்கள். எனது அப்பா எப்போதுமே நான் படப்பிடிப்புக்கு செல்லும் போது தப்ஸ்-அப் காட்டி அனுப்பி வைப்பார். சூர்யா எப்போதுமே நான் படப்பிடிப்புக்கு கிளம்பும் போது, வண்டியில் ஏற்றி கதவை அடைத்து விட்டு டாட்டா காட்டி அனுப்பி வைப்பார்.
தமிழ் திரையுலகில் ஒரு நாயகியின் உண்மையான வயதுக்கு, குறைவான வயதுடைய பாத்திரம் கொடுப்பவர் இயக்குநர் பிரம்மா மட்டும்தான். நிஜமாகவே இந்த எண்ணத்துக்கு இயக்குநருக்கு நன்றி சொல்ல வேண்டும். நாயகி என்றாலே 30 வயது கடந்தவுடன் வயதானவர் என்று முத்திரைக் குத்திவிடுகிறார்கள். பல இயக்குநர்கள் 12 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வேண்டும் என்றே அணுகியுள்ளார்கள்.
முழுக் கதையோடு பிரம்மா என்னை அணுகினார். திருமணமாகாத பெண்ணாக நடிக்க வேண்டும், டூவீலர் ஓட்ட வேண்டும் என்று முதலில் சொன்னார். அப்போதே இப்படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். பெண்களை வேறு ஒரு கண்ணோட்டத்தில் அணுகியிருப்பதற்கு பிரம்மாவிற்கு நன்றி.
பெரிய நாயகர்களின் படங்களை இயக்குநர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களுடைய படங்களில் பெண்களுக்கு கொஞ்சம் மரியாதை கொடுங்கள். வீட்டில் இருக்கும் பெண்களைப் போன்று நாயகிக்கு உடைகள் கொடுக்க முடியாது என தெரியும். தயவு செய்து கொஞ்சம் புத்திசாலித்தனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள். காமெடியன் அருகில் நிற்க வைத்து இரட்டை அர்த்த வசனங்களைப் பேச வைக்காதீர்கள். கேவலமான அறிமுக காட்சியை கொடுக்காதீர்கள். படங்களில் நாயகி ஒருவர் நாயகன் பின்னால் ‘ஐ லவ் யூ’ என்று சொல்லிக் கொண்டே திரிவதை நிறுத்துங்கள். ஒரு நாயகனுக்கு 4 நாயகிகள் வைத்தீர்கள் என்றால், இளைஞர்களும் நம்மளும் 4 காதலிகள் வைத்துக் கொள்ளலாம் என எண்ணுவார்கள். படத்தில் ஒரு நாயகனுக்கு ஒரு நாயகி போதும். இந்தியாவில் இருக்கும் பெண்களுக்காக சமூக பொறுப்புடன் நடந்து கொள்வோம்’ என்றார் ஜோதிகா.