‘ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்'-ஐ ஓரங்கட்டி ‘விக்ரம்’ முதலிடம்-மாஸ் காட்டும் தென்னிந்தியப் படங்கள்

‘ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்'-ஐ ஓரங்கட்டி ‘விக்ரம்’ முதலிடம்-மாஸ் காட்டும் தென்னிந்தியப் படங்கள்
‘ஆர்ஆர்ஆர்', 'கேஜிஎஃப்'-ஐ ஓரங்கட்டி ‘விக்ரம்’ முதலிடம்-மாஸ் காட்டும் தென்னிந்தியப் படங்கள்

2022-ம் ஆண்டின் டாப் 10 இந்திய திரைப்படங்கள் பட்டியலில், ‘விக்ரம்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் வெப்சீரீஸ் பட்டியலில், ‘கேம்பஸ் டைரீஸ்’ முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜூன் மாதத்துடன் அரை வருடங்கள் கடந்துள்ளநிலையில், 2023-ம் ஆண்டை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம். இதில் இந்தாண்டின் இந்திய திரையுலகில் இதுவரை வெளியான திரைப்படங்களில் தென்னிந்தியா படங்கள் தான், ரசிகர்களின் கவனத்தைப் அதிகளவில் பெற்றுள்ளன. இதற்கு படங்களின் வசூலே ஒரு சான்றாக அமைந்தாலும், ஐ.எம்.டி.பி. (IMDb) எனப்படும் இணையத் திரைப்பட தரவுத்தளம், இந்த வருடத்தில் இதுவரை வெளியான சிறந்த 10 இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி திரைப்படங்கள் பட்டியலில் ‘விக்ரம்’ முதலிடத்தை பிடித்துள்ளது.

1. விக்ரம்

லோகேஷ் கனகாராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், செம்பன் வினோத் ஜோஸ், மாரிமுத்து, காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து, கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி வெளியான இந்த திரைப்படம், இதுவரை 440 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. வசூலில், ‘கே.ஜி.எஃப்.’, ‘ஆர்.ஆர்.ஆர்.’ ஆகிய திரைப்படங்களை காட்டிலும் குறைவுதான் என்றாலும், மிகவும் சிறந்தப் படமாக ஐ.எம்.டி.பி. குறிப்பிட்டுள்ளது. 8.8/10 ரேட்டிங் பெற்று இந்திய அளவில் ‘விக்ரம்’ முதலிடத்தைப் பிடித்துள்ளது.

2. கே.ஜி.எஃப். 2

பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியான ‘கே.ஜி.எஃப்.’ திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 1200 கோடி ரூபாய்க்கு மேல் இந்தப் படம் வசூலித்திருந்தாலும், 8.5/10 ரேட்டிங் பிடித்து ‘விக்ரம்’ படத்தை விட ஒரு இடம் பின்தங்கியுள்ளது.

3. தி காஷ்மீர் ஃபைல்ஸ்

விவேக் அக்னி ஹோத்ரி இயக்கத்தில், அனுபம் கெர், விவேக் அக்னி ஹோத்ரியின் மனைவி பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், பாஷா சும்ப்லி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்த இந்தப் படம் மார்ச் மாதம் 11-ம் தேதி வெளியானது. ஜம்மு - காஷ்மீரில் வாழ்ந்துவந்த இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வடிவமைக்கப்பட்ட இந்தப் படம், பாஜக ஆளும் மாநிலங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 8.3/10 என்ற இளவில் ஐ.எம்.டி.பி ரேட்டிங் பெற்று இந்திய அளவில் 3-ம் இடம் பிடித்துள்ளது.

4. ஹிரதயம்

மோகன்லாலின் மகன் பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன், அருண் குரியன் உள்ளிட்ட பலர் நடிப்பில், காதல் படமாக, கடந்த ஜனவரி மாதம் வெளியான இந்தப் படம் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் 8.1/10 என்ற அளவில் ஐ.எம்.டி.பி ரேட்டிங் பெற்று இந்திய அளவில் 4-ம் இடம் பிடித்துள்ளது.

5. ஆர்.ஆர்.ஆர்

எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் 5-வது இடத்தை பிடித்துள்ளது. ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், இந்தியாவையும் தாண்டி நல்ல வரவேற்பைப் பெற்றது. 8/10 ஐ.எம்.டி.பி. ரேட்டிங் பெற்றுள்ளது.

முதல் 5 இடங்களில் (தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு) 4 படங்கள் தென்னிந்தியப் படங்களே இடம் பிடித்துள்ளன. 6-வது இடத்தில் ‘எ தர்ஸ்டே’ என்றப் படமும், 7-வது இடத்தில் ‘ஜூந்த்’ என்ற படமும், 8-வது இடத்தில் ‘சாம்ராட் பிருத்விராஜ்’ படமும், 9-வது இடத்தில் ‘ரன்வே 34’ படமும், 10-வது இடத்தை ‘கங்குபாய் கத்தியவாடி’ படமும் இடம் பிடித்துள்ளன. இந்தாண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘வலிமை’, ‘பீஸ்ட்’, ‘ராதே ஷ்யாம்’, ‘எதற்கும் துணிந்தவன்’, ‘சர்காரி வாரு பட்டா’, ‘ஆச்சார்யா’ ஆகிய தென்னிந்தியப் படங்கள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடிக்கவில்லை.

இதேபோல் வெப்சீரீஸ் பட்டியலில், கேம்பஸ் டைரீஸ் (9/10) முதலிடத்தையும், ராக்கெட் பாய்ஸ் (8.9/10) இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com