எஸ்.பி.பி. உடல் இன்று நல்லடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்..!
எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவ வல்லுநர்கள் தீவிரமாக முயற்சி செய்தும், சிகிச்சை பலன் அளிக்காததால் நேற்று மதியம் 1.04 மணியளவில் எஸ்.பி.பியின் உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டுச்செல்லப்பட்டது. அங்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் எஸ்பிபியின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டுச்செல்லப்பட்டது. பண்ணைவீட்டில் பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படவில்லை.இங்கு பாதுகாப்பு பணிக்காக 500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிலேயே இன்று எஸ்பிபியின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது
எஸ்பிபியின் உடலுக்கு இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான முன்னேற்பாடுகளை காவல்துறையினர் செய்துவருகின்றனர். தமிழக அரசு அறிவித்தப்படி காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும், இதற்காக 21 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி. உடல் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரி ஏடிஎஸ்பி திருவேங்கடம் தலைமையில் எஸ்பிபிக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்படுகிறது
அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளுக்கு பிறகு காலை 10 மணியளவில் அடக்கம் செய்யப்பட வேண்டிய பணிகள் ஆரம்பித்து 12 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது