அரசியலில் நடிகை அஞ்சலி களமிறங்க இருப்பதாக வந்த தகவல் உண்மையில்லை என மறுத்திருக்கிறார் நடிகை அஞ்சலி.
ஜேஎஸ்கே சதீஷ்குமார் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் அஞ்சலி நடித்த தரமணி திரைக்கு வந்து வெற்றி பெற்றிருக்கிறது. இதனை அடுத்து ஜெய்யுடன் இணைந்து பலூன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் அரசியலில் களமிறங்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக ஒரு தகவலும், தமிழகத்தில் ரஜினிகாந்த் தொடங்க உள்ள கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்காக அவர் நாடாளுமன்றத்தை ஐந்து நாட்கள் சுற்றிப்பார்த்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து அவரிடம் கேட்டால், ‘’சமீபத்தில் நான் நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தேன். அந்த தகவல் வெளியானபிறகு நான் அரசியலுக்கு வரப்போவதாக செய்திகள் வருகிறது. அரசியலுக்கு எப்போது வருவீர்கள்? என்று பலரும் கேட்கிறார்கள். அரசியலுக்கு வருவது எப்போது, திருமணம் செய்துகொள்வது எப்போது என்பதுபற்றி நான் முடிவு செய்யவில்லை.
ஆனால் எனக்கு எது எப்போது நடக்கும் என்று எழுதி வைத்திருக்கிறதோ யாருக்கு தெரியும். அது வரை சஸ்பென்ஸாகவே இந்தத் தகவல்கள் இருந்து விட்டுப்போகட்டும்’’ என்கிறார் அஞ்சலி. அரசியலுக்கு வருவது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வழக்கமாக கூறும் பதிலையே அஞ்சலியும் உதிர்த்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.