தமிழ்நாட்டில் விஜய்தான் பெரிய ஸ்டார் அவர் படத்துக்குதான் நிறைய காட்சிகள் கொடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ பேசியது இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் விஜய்யின் வாரிசு படத்தை வெளியிட போவது யார் யார் என்ற விவரம் தற்போது வெளியாகியிருக்கிறது.
அதன்படி, விஜய்யின் வாரிசு படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் லலித்குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோவின் ட்வீட்தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த விநியோகஸ்தர்கள் வாரிசு படத்தை வாங்கியிருக்கிறார்கள் என்பதன் பட்டியல் அடங்கிய வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில், நெல்லை, குமரி மாவட்டங்களில் ஸ்ரீ சாய் கம்பைன்ஸின் முத்துகனி, மதுரையில் ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ், திருச்சி தஞ்சையில் ராது இன்ஃபோட்டைன்மென்ட்டின் வி.எஸ்.பாலமுரளி, சேலத்தில் சேலம் கார்ப்பரேஷனின் செந்தில் ஆகியோர் வாரிசு படத்தை வெளியிடுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இதுபோக, சென்னை, செங்கல்பட்டு, கோவை, வடக்கு ஆற்காடு மற்றும் தெற்கு ஆற்காடு ஆகிய பகுதிகளில் வெளியிடும் உரிமம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வசம் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக வாரிசு படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் எனக் கேட்டு துணிவு படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினை சந்திக்கப் போவதாக தில் ராஜூ பேட்டிக் கொடுத்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.
இருப்பினும் அஜித்தின் துணிவு படத்துக்கான விநியோகஸ்தர்கள் யார் யார் என்பது குறித்த எந்த விவரம் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.